('என்ன'? எனப் பன்மையாற் கூறியது, இரண்டும் தொன்றுதொட்டு வேற்றுமையின்றிக் கலந்து வருதல், இன்பதுன்பங்கள் ஒக்க அனுபவித்தல், இன்றியமையாமை என்றிவற்றை நோக்கி. தெய்வப் புணர்ச்சியாகலான், அதுபொழுது உணர்ச்சியிலள் ஆகியாள் பின் உடையளாமன்றே?ஆயவழி 'இவன் யாவன் கொல்' எனவும், 'என்கண் அன்புடையன்கொல்'? எனவும், 'இன்னும்இவனைத் தலைப்பெய்தல் கூடுங்கொல்'? எனவும் அவள்மனத்தின்கண் நிகழும், அந்நிகழ்வனவற்றைக் குறிப்பான் அறிந்து, அவை தீரக் கூறியவாறு. 'என்னை' என்று பாடம் ஓதுவாரும் உளர்.) கருமணியில் பாவாய்நீ போதாயாம் வீழும் திருநுதற் கில்லை இடம்.1123 (இடந்தலைப்பாட்டின்கண் தலைமகள் நீக்கத்துச் சொல்லியது.) கருமணியிற் பாவாய் நீ போதாய் - என் கண்ணிற் கருமணியின்கண் உறையும் பாவாய், நீ அங்கு நின்றும் போதருவாயாக; யாம் வீழும் திருநுதற்கு இடம் இல்லை - போதராதிருத்தியாயின் எம்மால் விரும்பப்பட்ட திருநுதலையுடையாட்கு இருக்க இடமில்லையாம். ('யான் காணாது அமையாமையின் இவள் புறத்துப் போகற்பாலளன்றி என் கண்ணுள் இருக்கற்பாலள்; இருக்குங்கால் நின்னோடு ஒருங்கு இருக்க இடம் போதாமையின், நின்னினும் சிறந்த இவட்கு இடத்தைக் கொடுத்து நீ போதுவாயாக' என்பதாம்.)வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்கு மிடத்து. 1124 (பகற்குறிக்கண் புணர்ந்து நீங்குவான் சொல்லியது.) ஆயிழை உயிர்க்கு வாழ்தல் அன்னள் - தெரிந்த இழையினையுடையாள் எனக்குப் புணருமிடத்து உயிர்க்கு உடம்போடு கூடி வாழ்தல் போலும், நீங்குமிடத்து அதற்குச் சாதல் அன்னள் - பிரியுமிடத்து, அதற்கு அதனின் நீங்கிப் போதல் போலும்; ('எனக்கு' என்பதும், 'புணருமிடத்து' என்பதும் அவாய் நிலையான் வந்தன. வாழும் காலத்து வேற்றுமையின்றி வழி நிற்றலானும், சாகும் காலத்து வருத்தம் செய்தலானும் அவற்றை அவள் புணர்வு பிரிவுகட்கு உவமையாக்கினான்.)
|