உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.1125 (ஒருவழித் தணந்துவந்த தலைமகன், நீயிர் தணந்த ஞான்று எம்மை உள்ளியும் அறிதீரோ? என்ற தோழிக்குச் சொல்லியது.) ஒள் அமர்க்கண்ணாள் குணம், யான் மறப்பின் உள்ளுவன் - ஒள்ளியவாய் அமரைச் செய்யும் கண்ணினையுடையாள் குணங்களை யான் மறந்தேனாயின், நினைப்பேன்; மறப்பு அறியேன் - ஒரு பொழுதும் மறத்தலையறியேன், ஆகலான் நினைத்தலையும் அறியேன். (மன் : ஒழியிசைக்கண் வந்தது. குணங்கள்: நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு முதலாயின. இத்துணையும் தலைமகன் கூற்று, மேல் தலைமகள் கூற்று.)கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார் நுண்ணியர்எங் காத லவர். 1126 (ஒருவழித்தணப்பின்கண் தலைமகனைத் தோழி இயற்பழிக்கும் என்று அஞ்சி அவள் கேட்பத் தன்னுள்ளே சொல்லியது.) (தாம் காணாமை பற்றிச் சேய்மைக்கண் போயினார் என்று கருதுவார் கருதுக,) எம் காதலர் கண்ணுள்ளின் போகார் - எம்முடைய காதலர் எம் கண்ணகத்து நின்றும் போகார்; இமைப்பின் பருவரார் - யாம் அறியாது இமைத்தேமாயின் அதனால் வருந்துவதும் செய்யார்; நுண்ணியர் - ஆகலான் காணப்படா நுண்ணியர். (இடைவிடாத நினைவின் முதிர்ச்சியான் எப்பொழுதும் முன்னே தோன்றலின் 'கண்ணுள்ளின் போகார்' என்றும், இமைத்துழியும் அது நிற்றலான் 'இமைப்பின் பருவரார்' என்றும் கூறினாள்.)கண்உள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக் கறிந்து. 1127 (இதுவும் அது.) காதலவர் கண் உள்ளாராகக் கண்ணும் எழுதேம் - காதலர் எப்பொழுதும் எம் கண்ணின் உள்ளார் ஆகலான், கண்ணினை அஞ்சனத்தால் எழுதுவதும் செய்யேம்; கரப்பாக்கு அறிந்து - அத்துணைக் காலமும் அவர் மறைதலை அறிந்து. (இழிவு சிறப்பு உம்மை மாற்றப்பட்டது. 'கரப்பாக்கு' என்பது வினைப்பெயர். வருகின்ற 'வேபாக்கு' என்பதும் அது. 'யான் இடை ஈடின்றிக் காண்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறு என்னை'? என்பது குறிப்பெச்சம்.)
|