அதிகாரம் 114. நாணுத்துறவு உரைத்தல் [ அஃதாவது , சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் தோழிக்குத் தன் நாண் துறவு உரைத்தலும் , அறத்தொடு நிற்பிக்கலுற்ற தலைமகள் அவட்குத் தன் நாண் துறவு உரைத்தலும் ஆம் . இது காதல் மிக்குழி நிகழ்வது ஆகலின் , காதற்சிறப்புஉரைத்தலின் பின் வைக்கப்பட்டது.]
காமம் உழந்து வருந்தினார்க் கேமம் மடல்அல்ல தில்லை வலி. 1131 (சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.) காமம் உழந்து வருந்தினார்க்கு - அரியராய மகளிரோடு காமத்தை அனுபவித்துப் பின் அது பெறாது துன்புற்ற ஆடவர்க்கு; ஏமம் மடல் அல்லது வலி இல்லை - பண்டும் ஏமமாய் வருகின்ற மடல் அல்லது, இனி எனக்கு வலியாவதில்லை. (ஏமமாதல்: அத்துன்பம் நீங்கும் வகை அவ்வனுபவத்தினைக் கொடுத்தல். வலி: ஆகுபெயர். 'பண்டும் ஆடவராயினார் இன்பம் எய்திவருகின்றவாறு நிற்க, நின்னை அதற்குத் துணை என்று கருதிக் கொன்னே முயன்ற யான், இது பொழுது அல்லாமையை அறிந்தேன் ஆகலான், இனி யானும் அவ்வாற்றான் அதனை எய்துவல்', என்பது கருத்து.)நோனா உடம்பும் உயிரும் மடல்ஏறும் நாணினை நீக்கி நிறுத்து. 1132 ('நாணுடைய நுமக்கு அது முடியாது', என மடல் விலக்கல் உற்றாட்குச் சொல்லியது) நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும் - அவ் வருத்தத்தினைப் பொறாத உடம்பும் உயிரும் அதற்கு ஏமமாய மடல் மாவினை ஊரக் கருதாநின்றன; நாணினை நீக்கி நிறுத்து - அதனை விலக்குவதாய நாணினை அகற்றி. ('வருந்தினார்க்கு' என மேல் வந்தமையின், செயப்படு பொருள் ஈண்டுக் கூறார் ஆயினார். மடல் - ஆகுபெயர். 'நீக்கி நிறுத்து' என்பது ஒரு சொல் நீர்மைத்து. அதுவும் இது பொழுது நீங்கிற்று என்பான், 'உடம்பும் உயிரும்' என்றான், அவைதாம் தம்முள் நீங்காமற்பொருட்டு. 'மடலேறும்' என்றது, அவள் தன் ஆற்றாமையறிந்து கடிதிற்குறை நேர்தல் நோக்கி.)
|