('என்னாது' என்பது முன்னும் கூட்டி மகளிர் என்பது வருவிக்கப்பட்டது. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'மன்று'என்பது தந்தை தன்னையரை நோக்கி. உலகத்துப் பெண் பாலார் காமத்து இயல்பு கூறுவாள் போன்று தன் காமம் பெருகியவாறும், இனிஅறத்தோடு நிற்றல் வேண்டும் என்பதும் குறிப்பால் கூறியவாறாயிற்று ). அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம் மறுகின் மறுகும் மருண்டு.1139 (இதுவும் அது.) எல்லாரும் அறிகிலார் என்று - யான் முன் அடங்கி நிற்றலான் எல்லாரும் என்னை அறிதல் இலர், இனி அவ்வாறு நில்லாது யானே வெளிப்பட்டு அறிவிப்பல் என்று கருதி; என் காமம் மறுகில் மருண்டு மறுகும் - என் காமம் இவ்வூர் மறுகின்கண்ணே மயங்கிச் சுழலாநின்றது. (மயங்குதல் - அம்பலாதல், மறுகுதல் - அலராதல், 'அம்பலும் அலருமாயிற்று'. இனி 'அறத்தொடு நிற்றல் வேண்டும்', என்பதாம் 'அறிவிலார்' என்பதூஉம் பாடம்.) யாங்கண்ணின் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா வாறு. 1140 (செவிலிக்கு அறத்தொடு நின்று வைத்து, 'யான் நிற்குமாறு என்னை' என்று நகையாடிய தோழியோடு புலந்து தன்னுள்ளே சொல்லியது,) யாம் கண்ணின்காண அறிவில்லார் நகுப - யாம் கேட்குமாறுமன்றிக் கண்ணாற் காணுமாறு எம்மை அறிவிலார் நகாநின்றார்; யாம் பட்ட தாம்படாவாறு - அவர் அங்ஙனஞ்செய்கின்றது யாம் உற்ற நோய்கள் தாம் உறாமையான். ('கண்ணின்' என்றது, முன் கண்டறியாமை உணர நின்றது. அறத்தொடு நின்றமை அறியாது வரைவு மாட்சிமைப்படுகின்றிலள் எனப் புலக்கின்றாள் ஆகலின், ஏதிலாளாக்கிக் கூறினாள். இது, நகாநின்று சேண்படுக்குந் தோழிக்குத் தலைமகன் கூறியதாங்கால், அதிகாரத்திற்கு ஏலாமை அறிக.)
|