பக்கம் எண் :

452
அதிகாரம் 115. அலர் அறிவுறுத்தல்

[ அஃதாவது , களவொழுக்கம் வேண்டிய தலைமகன் பிறர் கூறுகின்ற அலர் தனக்காகின்றவற்றைத் தோழிக்கு அறிவுறுத்தலும் , வரைவாக உடன் போக்காக ஒன்று வேண்டிய தலைமகளும் தோழியும் அவ்வலரை அவன்றனக்கு அறிவுறுத்தலும் ஆம் . இது நாணுத் துறந்தவழி நிகழ்வதாகலான் , நாணுத்துறவுஉரைத்தலின் பின் வைக்கப்ப்பட்டது.]

அலர்எழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலர்அறியார் பாக்கியத் தால்.

1141
(அல்ல குறிப்பட்ட பிற்றைஞான்று வந்த தலைமகனைத் தோழி அலர் கூறி வரைவு கடாயவழி அவன் சொல்லியது.) அலர் எழ ஆர் உயிர் நிற்கும்-மடந்தையொடு எம்மிடை நட்பு ஊரின்கண் அலராயெழுதலான் அவளைப் பெறாது வருந்தும் என் அரிய உயிர் பெற்றதுபோன்று நிலைபெறும்; அதனைப் பாக்கியத்தால் பலர்அறியார் - அந்நிலை பேற்றைத் தெய்வத்தால் யானே அறிவதல்லது கூறுகின்ற பலரும் அறியார். (அல்ல குறிப்பட்டுத் தலைமகளை எய்தப்பெறாத வருத்தமெல்லாம் தோன்ற, 'அரிய உயிர்' என்றும்,அங்ஙனம் அரியாளை எளியளாக்கி எடுக்கின்றமையின், அஃது அவ்வாருயிர்க்குப் பற்றுக்கோடாக நின்றது என்பான், 'அலர் எழ ஆருயிர் நிற்கும்' என்றும், 'பற்றுக்கோடாதலை அவ்வேதிலார் அறியின் தூற்றாது ஒழிவர்; ஒழியவே, ஆருயிர் போம், ஆகலான், அவரறியா தொழிகின்றது தெய்வத்தான்,' என்றும் கூறினான். முற்று உம்மை விகாரத்தால் தொக்கது.

மலர்அன்ன கண்ணாள் அருமை அறியா
தலர்எமக் கீந்ததிவ் வூர்.

1142
(இதுவும் அது.) மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது - மலர்போலும் கண்ணையுடையாளது எய்தற்கு அருமை அறியாது; இவ்வூர் அலர் எமக்கு ஈந்தது - இவ்வூர் அவளை எளியளாக்கி அவளோடு அலர் கூறலை எமக்கு உபகரித்தது. (அருமை: அல்ல குறிப்பாட்டானும் இடையீடுகளானும் ஆயது. 'ஈந்தது' என்றான், தனக்குப் பற்றுக்கோடாகலின், அலர் கூறுவாரை அவர் செய்த உதவி பற்றி 'இவ்வூர்' என்றான்.)