பக்கம் எண் :

315
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தல் பொருட்டு.
784
நட்டல் நகுதற்பொருட்டன்று - ஒருவனோடு, ஒருவன் நட்புச் செய்தல் தம்முள் நகுதற்கு இயைந்தன சொல்லி நகையாடற் பொருட்டன்று; மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு - அவர்க்கு வேண்டாத செய்கை உளதாயவழி முற்பட்டுக் கழறுதற் பொருட்டு. (பழியும் பாவமும் தரும் செய்கை துன்பமே பயத்தலான் வேண்டப்படுவதன்மையின் அதனை 'மிகுதி' என்றும், அது செய்தற்கு முன்னே மீட்டல் வேண்டுதலின், 'மேற்சென்று' என்றும், இன்சொற்கு மீளாமையின், 'இடித்தற்பொருட்டு' என்றும் கூறினார். இதனான் நட்பின் பயன் கூறப்பட்டது.)

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்புஆம் கிழமை தரும்.

785
புணர்ச்சி பழகுதல் வேண்டா - ஒருவனோடு ஒருவன் நட்பாதற்குப் புணர்ச்சியும் பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டுவதில்லை; உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும் - இருவர்க்கும் ஒத்த உணர்ச்சி தானே நட்பாம் உரிமையைக் கொடுக்கும். (புணர்ச்சி: ஒரு தேயத்தராதல். 'இன்றே போல்க நும் புணர்ச்சி'(புறம்.58) என்றதும் அதனை. பழகுதல் - பலகால் கண்டும் சொல்லாடியும் மருவுதல். இவ்விரண்டும் இன்றிக் கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையார்க்கும் போல உணர்ச்சி யொப்பின், அதுவே உடன் உயிர் நீங்கும் உரிமைத்தாய நட்பினைப் பயக்கும் என்பதாம்.(புற.நா.217) நட்பிற்குப் புணர்ச்சி, பழகுதல், உணர்ச்சியொத்தல் என்னும் காரணம் மூன்றனுள்ளும், பின்னது சிறப்புடைத்து என்பது இதனான் கூறப்பட்டது.)

முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகம்நக நட்பது நட்பு.

786
முகம்நக நட்பது நட்பு அன்று - கண்டவழி அகமொழிய முகமாத்திரமே மலரும் வகை நட்குமது நட்பாகாது; நெஞ்சத்து அகம் நக நட்பது நட்பு - அன்பால் அகமும் மலர நட்குமதே நட்பாவது.