பக்கம் எண் :

455
அலர்நாண ஒல்வதோ அஞ்சல்ஓம் பென்றார்
பலர்நாண நீத்தக் கடை.
1149
(வரைவிடை வைத்துப் பிரிவின்கண் ஆற்றாளாய தலைமகள். அவன் வந்து சிறைப்புறத்தானாதல் அறிந்து, 'அலரஞ்சி ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது.) அஞ்சல் ஒம்பு என்றார் பலர் நாண நீத்தக் கடை - தம்மை எதிர்ப்பட்ட ஞான்று 'நின்னிற் பிரியேன் அஞ்சல் ஒம்பு' என்றவர் தாமே இன்று கண்டார் பலரும் நாணும் வகை நம்மைத் துறந்த பின்; அலர் நாணா ஒல்வதோ - நாம் ஏதிலார் கூறும் அலருக்கு நாணக் கூடுமோ? கூடாது. ('நாண' என்னும் வினையெச்சம் 'ஒல்வது' என்னும் தொழிற் பெயருள் ஒல்லுதல் தொழிலோடு முடிந்தது. 'கண்டார் நாணும் நிலைமையமாய யாம் நாணுதல் யாண்டையது'? என்பதாம்.)

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கௌவை எடுக்கும்இவ் வூர்.

1150
(தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய் அலரறிவுறீஇ அவன் உடன்போக்கு நயப்பச் சொல்லியது.) யாம் வேண்டும் கௌவை இவ்வூர் எடுக்கும் - உடன் போகற்கு ஏதுவாகல் நோக்கி யாம் பண்டே விரும்புவதாய அலரை இவ்வூர்தானே எடாநின்றது; காதலர் தாம் வேண்டின் நல்குவர் - இனிக் காதலர் தாமும் யாம் வேண்டியக்கால் அதனை இனிதின் நேர்வர், அதனால் இவ்வலர் நமக்கு நன்றாய் வந்தது. (எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'நம்கண் காதல் உடைமையின் மறார்' என்பது தோன்றக் 'காதலர்' என்றாள். இவ்விருபது பாட்டும் புணர்தல் நிமித்தம்.)

களவியல் முற்றும்