கற்பியல்
இனி, கற்புப் பதினெட்டு அதிகாரத்தால் கூறுவான்தொடங்கி, முதற்கண் பிரிவு ஆற்றாமை கூறுகின்றார்.அதிகாரம் 116. பிரிவு ஆற்றாமை[ அஃதாவது , வரைந்தெய்திய பின் தலைமகன் அறம் பொருள் இன்பங்களின் பொருட்டுச் சேயிடையினும் ஆயிடையினும் தலைமகளைப் பிரிந்து செல்லும்; செல்லும் ஞான்று அப்பிரிவினை அவள் ஆற்றாளாம்தன்மை . அஃது ஈண்டுப் பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி கூறலும் , அவள் தனக்குத் தலைமகள் தானே அவன் குறிப்பான் உணர்ந்து கூறலும் ,பிரிவணர்த்தியவழிக் கூறலும் , தலைமகன் பிரிந்துழி ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைமகள் மறுத்துக் கூறலும் என நால்வகையால் கூறப்படும் .] செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை. 1151 (பிரிந்து கடிதின் வருவல் என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது.) செல்லாமை உண்டேல் எனக்கு உரை - நீ எம்மைப் பிரியாமை உண்டாயின் அதனை எனக்குச் சொல்; மற்று நின் வல்வரவு வாழ்வார்க்கு உரை - அஃதொழியப் பிரிந்துபோய் விரைந்து வருதல் சொல்வையாயின் அதனை அப்பொழுது உயிர்வாழ்வார்க்குச் சொல். (தலைமகளை ஒழித்து 'எனக்கு' என்றாள், தான் அவள் என்னும் வேற்றுமை அன்மையின். அக்கால மெல்லாம் ஆற்றியிருந்து அவ்வரவு காணவல்லளல்லள்; பிரிந்தபொழுதே இறந்துபடும் என்பதாம். அழுங்குவித்தல்: பயன், இதனைத் தலைமகள் கூற்றாக்கி உரைப்பாரும் உளர்.)இன்கண் உடைத்தவர் பார்வல் பிரி்வஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு. 1152 (பிரிவு தலைமகன் குறிப்பான் அறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) அவர் பார்வல் இன்கண் உடைத்து - தழையும் கண்ணியும் கொண்டு பின்னின்ற ஞான்று அவர் நோக்கு மாத்திரமும் புணர்ச்சி குறித்தமையான் நமக்கு இன்பமுடைத்தாயிருக்கும்; புணர்வு பிரிவஞ்சும் புன்கண் உடைத்து - இன்று அப்புணர்ச்சிதான் நிகழா நிற்கவும் அது பிரிவர் என்று அஞ்சும் அச்சத்தினை உடைத்தாயிற்று; அவர் அன்பின் நிலைமை இது.
|