பக்கம் எண் :

457

('பார்வல்' என்றதனால், புணர்ச்சி பெறாத பின்னிலைக்காலம் பெறப்பட்டது. புன்கண் என்னும் காரணப்பெயர் காரியத்தின் மேலாயிற்று. அவ்வச்சத்தினை உடைத்தாதலாவது, 'முள்ளுறழ் முளையெயிற்று அமிழ்தூறுந் தீநீரைக் - கள்ளினும் மகிழ்செய்யும் என உரைத்தும் அமையார், என் ஒள்ளிழை திருத்தும்' (கலித்-பாலை-3)பண்டையிற் சிறப்பால். அவன் பிரிதிற் குறிப்புக் காட்டிஅச்சம் செய்தலுடைமை. அழுங்குவித்தல்: பயன்.)

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோர் இடத்துண்மை யான்.
1153
(இதுவும் அது.) அறிவு உடையார் கண்ணும் - பிரியேன் என்ற தம் சொல்லும் நம் பிரிவாற்றாமையும் அறிதலுடையராய காதலர் கண்ணும்; ஓர் இடத்துப் பிரிவு உண்மையான் - ஒரோவழிப் பிரிவு நிகழ்தலான்; தேற்றம் அரிது - அவர் சொல்லும் தலையளியும் பற்றி நம்மாட்டு அன்புடையார் எனத்தேறும் தேற்றம் அரிதாயிருந்தது. (அரோ: அசைநிலை. உம்மை உயர்வு சிறப்பின்கண் வந்தது.)

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க் குண்டோ தவறு.

1154
(இதுவும் அது.) அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் - எதிர்ப்பட்ட ஞான்றே தலையளி செய்து, நின்னிற் பிரியேன் அஞ்சல் என்றவர் தாமே பின் பிரிவாராயின்; தெளிந்த சொல் தேறியார்க்குத் தவறு உண்டோ - அவர்க்கன்றி அவர் தெளிவித்த சொல்லை மெய்யெனத் தெளிந்தார்க்குக் குற்றம் உண்டோ? ('தேறியார்' என்பது தன்னைப் பிறர்போல் கூறல். 'சொல்லும் செயலும் ஒவ்வாமைக் குற்றம் அவர்க்கு எய்தும், அஃது எய்தாவகை அழுங்
குவி' என்பது கருத்து.)

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.

1155