(இதுவும் அது.) ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் - என்னுயிரைச் செல்லாமல் காத்தியாயின், அதனை ஆளுதற்கு அமைந்தாருடைய செலவினை அழுங்குவிப்பாயாக; மற்று அவர் நீங்கின் புணர்வு அரிது - அழுங்குவிப்பாரின்றி அவர் செல்வராயின், அவரால் ஆளப்பட்ட உயிரும் செல்லும்; சென்றால் பின் அவரைக் கூடுதல் எனக்கு அரிதாம். (ஆளுதற்கு அமைதல்: இறைவராதற்குத் தெய்வத்தால் ஏற்புடையராதல். மற்று: வினைமாற்றின்கண் வந்தது.) பிரிவுரைக்கும் வன்கண்ண ராயின் அரிதவர் நல்குவர் என்னும் நசை. 1156 (தலைமகன் பிரிவுணர்த்தியவாறு வந்து சொல்லிய தோழிக்குச் சொல்லியது.) அவர் பிரிவு உரைக்கும் வன்கண்ணராயின் -நம் கவவுக் கடுமையறிந்த தலைவர், தாமே நம் முன்னின்று தம்பிரிவினை உணர்த்தும் வன்கண்மை உடையராயின்; நல்குவர் என்னும் நசை அரிது - அத்தன்மையார் பின்பு நம் ஆற்றாமை அறிந்து வந்து தலையளி செய்வார் என்று இருக்கும் ஆசை விடப்படும். (அருமை: பயன்படுதல் இல்லாமை.. 'கூடியிருந்தே அன்பின்றிப் பிரிவு எண்ணுதலும் உணர்த்தலும் வல்லராயினார், பிரிந்துபோய் அன்புடையராய் நம்மை நினைத்து வந்து நல்குதல் யாண்டையது'? என்பதாம். அழுங்குவித்தல் : பயன்.) துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை இறைஇறவா நின்ற வளை. 1157 (இதுவும் அது.) துறைவன் துறந்தமை - துறைவன் என்னைப் பிரியலுற்றமையை; முன் கை இறை இறவாநின்ற வளை தூற்றாகொல் - அவன் உணர்த்தாமல் தாமே உணர்ந்து என் முன் கையில் இறையினின்றும் கழலாநின்ற வளைகள் எனக்கு அறிவியாவோ? அவன் உணர்த்த உணர்ந்து வந்து நீ அறிவித்தல் வேண்டுமோ? (முன்னே நிகழ்ந்தமையின் 'துறந்தமை' என்றும், கேட்ட துணையான் மெலிந்து ஆற்றாமையின், 'இறவாநின்ற' என்றும் கூறினாள். 'அழுங்குவித்து வந்து கூறற்பாலை யல்யாயை நீயும், இவ்வளைகள் செய்தனவே செய்தாய்' எனப் புலந்து கூறியவாறு.)
|