பக்கம் எண் :

459
இன்னா தினன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னா தினியார்ப் பிரிவு.
1158
(இதுவும் அது.) இனன் இல் ஊர் வாழ்தல் இன்னாது - மகளிர்க்குத் தம் குறிப்பு அறியும் தோழியர் இல்லாத வேற்றூரின்கண் வாழ்தல் இன்னாது; இனியார்ப் பிரிவு அதனினும் இன்னாது - அதன் மேலும் தம் காதலரைப் பிரிதல் அதனினும் இன்னாது. (தலைவன் செலவினை அழுங்குவித்து வாராது உடன்பட்டு வந்தமை பற்றிப் புலக்கின்றாளாகலின் , 'இனன் இல் ஊர்' என்றாள். உலகியல் கூறுவாள் போன்று தனக்கு அவ்விரண்டும் உண்மை கூறியவாறு.)

தொடின்சுடின் அல்லது காமநோய் போல
விடின்சுடல் ஆற்றுமோ தீ.

1159
(காமம் தீயே போன்று தான் நின்ற இடத்தைச் சுடுமாகலான் நீ ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது.) தீத்தொடின் சுடின் சுடலல்லது - தீத்தன்னைத் தொட்டாற் சுடுமாயின் சுடுதல்லது; காமநோய் போலவிடின் சுடல் ஆற்றுமோ - காமமாகிய நோய் போலத் தன்னை அகன்றால் தப்பாது சுடுதலை வற்றோ! மாட்டாது. (சுடுமாயின் என்பது, மந்திர மருந்துகளான் தப்பிக்கப்படாதாயின் என்றவாறு. காமத்திற்கு அதுவும் இல்லை என்பாள், வாளா 'சுடல்' என்றாள். அகறல்: நுகராமை. 'சுடல்' என்பது முன்னும் கூட்டப்பட்டது. 'தீயினும் கொடியதனை யான் ஆற்றுமாறு என்னை' என்பதாம்.)

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.

1160
(தலைவியர் பலரும் பிரிவாற்றியிருப்பர், அது நீ செய்கின்றில்லை, என்ற தோழிக்குச் சொல்லியது.) (நீ சொல்லுகின்றது ஒக்கும்,) அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி - பிரிவுணர்த்திய வழி அதற்கு உடம்பட்டுப் பிரியுங்கால் நிகழும் அல்லல் நோயினையும் நீக்கி; பிரிவு ஆற்றிப் பின் இருந்து வாழ்வார் பலர் - பிரிந்தால் அப்பிரிவு தன்னையும் ஆற்றிப் பின்னும் இருந்து உயிர் வாழும்மகளிர் உலகத்துப் பலர்.