பக்கம் எண் :

461

'இஃதோ செல்வர்க் கொத்தனென் யான்' என்புழிப் போல ஈண்டுச் சுட்டுப் பெயர் ஈறு திரிந்து நின்றது. 'இஃதோர் நோயை'என்று பாடம் ஓதுவாரும் உளர். அது பாடமன்மை அறிக. 'இனி அதற்கடுத்தது நீ செயல் வேண்டும்' என்பதாம்.]

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்
குரைத்தலும் நாணுத் தரும்.
1162
('ஈண்டையார் அறியாமல் மறைத்தல் ஆண்டையார் அறியத் தூது விடுதல் என்னும் இரண்டனுள் ஒன்று செயல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது). இந்நோயைக் கரத்தலும் ஆற்றேன்-இந்நோயை ஈண்டை அறியாமல் மறைத்தலும் வல்லேனாகின்றிலேன்; நோய் செய்தார்ககு உரைத்தலும் நாணுத் தரும் - ஆகாக்கால், நோய் செய்தவர்க்கு உரைக்க எனின், அதுவும் எனக்கு நாணினைத் தாரா நின்றது, இனி என் செய்கோ? (ஒருகாலைக்கு ஒருகால் மிகுதலின், 'கரத்தலும் ஆற்றேன்' என்றும், சேயிடைச் சென்றவர்க்கு இது சொல்லித் தூதுவிட்டால் இன்னும் இருந்தேன் என்பது பயக்கும் என்னும் கருத்தால், 'நாணுத் தரும்' என்றும் கூறினாள்.)

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பி னகத்து.

1163
(இதுவும் அது.) காமமும் நாணும் - காமநோயும் அதனைச் செய்தவர்க்கு உரைக்கல் ஒல்லாத நாணும்; நோனா என் உடம்பின் அகத்து - தம்மைப் பொறாத என்னுடம்பின் கண்ணே; உயிர் காவாத் தூங்கும் - உயிர் காத்தண்டாக அதன் இரு தலையிலும் தூங்காநின்றன. (பொறாமை மெலிவானாயது. தூங்கும் என்பது, ஒன்றினொன்று மிகாது இரண்டும் ஒத்த சீர என்பது தோன்ற நின்றது. 'தூது விடவும் ஒழியவும் பண்ணுவனவாய காம நாண்கள் தம்முள் ஒத்து உயிரினை இறுவியா நின்றன. யான் அவற்றுள் ஒன்றின்கண் நிற்கமாட்டாமையின், இஃது இற்றே விடும்' என்பதாம்.)

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.

1164