காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன்.1167 ('காமக்கடல் நிறை புணையாக நீந்தப்படும்', என்றாட்குச் சொல்லியது) காமக் கடும்புனல் நீந்திக் கரை காணேன் - காமமாகிய கடல் நீந்தாதேனல்லேன், நீந்தியும் அதற்குக் கரை காண்கின்றிலேன்; யாமத்தும் யானே உளேன் - அக்காணாமைக் காலந்தான் எல்லோரும் துயிலும் அரையிருளாயிற்று, அவ்வரை இருட்கண்ணும் அதற்கு ஒரு துணையின்றி யானேயாயினேன், ஆயும் இறந்துபட்டுய்ந்து போகாது உளனாகாநின்றேன், ஈதொரு தீவினைப்பயன் இருந்தவாறென். (கடுமை, ஈண்டு மிகுதிக்கண் நின்றது. உம்மை முன்னும் கூட்டப்பட்டது. யானே ஆயினேன் என்பது நீ துணையாயிற்றிலை என்னும் குறிப்பிற்று.) மன்னுயி ரெல்லாம் துயிற்றி அளித்திரா என்அல்ல தில்லை துணை. 1168 (இரவின் கொடுமை சொல்லி இரங்கியது.) இரா அளித்து - இரா அளித்தாயிருந்தது; மன் உயிர் எல்லாம் துயிற்றி என்னல்லது துணை இல்லை - உலகத்து நிலை பெறுகின்ற உயிர்களையெல்லாம் தானே துயிலப் பண்ணுதலான், என்னையல்லாது வேறு துணை உடைத்தாயிற்றில்லை. ('துயிற்றி' எனத் திரிந்து நின்ற வினையெச்சம், அவாய் நிலையான் வந்த உடைத்தாதலோடு முடிந்தது. 'துணையோடு ஒன்றுகின்ற உயிர்களெல்லாம், விட்டு இறந்துபடும் எல்லையேனாய என்னையே துணையாகக் கோடலின், அறிவின்று' என்பது பற்றி, 'அளித்து' என்றாள். இகழ்ச்சிக் குறிப்பு.) கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் நெடிய கழியும் இரா. 1169 (இதுவும் அது.) இந்நாள் நெடிய கழியும் இரா - காதலரோடு நாம் இன்புற்ற முன்னாள்களிற் குறியவாய், அவர் பிரிவாற்றேமாகின்ற இந்நாள்களிலே நெடியவாய்ச் செல்கின்ற கங்குல்கள்; கொடியார் கொடுமையின் தாம் கொடிய - அக்கொடியாரது கொடுமைக்கு மேலே தாம் கொடுமை செய்யாநின்றன. (தன்னாற்றாமை கருதாது பிரிதலின், 'கொடியார்' என்றாள். கொடுமை: கடிதின் வாராது நீட்டித்தல். அவர் பிரிவானும் நீட்டிப்பானும் உளதாய ஆற்றாமைக்குக் கண்ணோடாமை மேலும் பண்டையின் நெடியவாய்க் கொடியவாகாநின்றன என்பதாம்.)
|