பக்கம் எண் :

464
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்
1170
(நின் கண்கள் பேரழகு அழிகின்றனவாகலின் அழற்பாலையல்லை, என்றாட்குச் சொல்லியது.) உள்ளம் போன்று உள்வழி செல்கிற்பின் - மனம் போலக் காதலருள்ள தேயத்துக் கடிதிற்செல்ல வல்லன ஆயின், என் கண் வெள்ளநீர் நீந்தல - என கண்கள் இங்ஙனம் வெள்ளமாகிய தம் நீரை நீந்தா. (அது மாட்டாமையின், இனி அவற்றிற்கு நீந்துதலேயுள்ளது என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. மனத்திற்குச் செலவாவது நினைவேயாகலின், 'உள்ளம் போன்று' என்றும், மெய்க்கு நடந்து செல்ல வேண்டுதலின் கண்கள் அதனொடு சென்று காதலரைக் காண்டல் கூடாது என்னும் கருத்தால் 'செல்கிற்பின்' என்றும் கூறினாள். இதனான் வருகின்ற அதிகாரமும் தோற்றுவாய் செய்யப்பட்டது.)

அதிகாரம் 118. கண் விதுப்பு அழிதல்

[ அஃதாவது , கண்கள் தம் காட்சி விதுப்பான் வருந்துதல் , காட்சிவிதுப்பு தலைமகனைக் காண்டற்குவிரைதல் . இது படரான் மெலிந்தவழி நிகழ்வதாகலின் , படர் மெலிந்து இரங்கலின் பின் வைக்கப்பட்டது .]

கண்தாம் கலுழ்வது எவன்கொலோ? தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது

1171
(நின் கண்கள் கலுழ்ந்து தம் அழகு இழவாநின்றன, நீ ஆற்றல் வேண்டும், என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) தண்டா நோய் யாம் கண்டது தாம் காட்ட - இத்தணியா நோயை யாம் அறிந்தது தாம் எமக்குக் காதலரைக் காட்டலானன்றோ; கண் தாம் கலுழ்வது எவன் கொல் - அன்று அத்தொழிலவாய கண்கள், இன்று எம்மைக் காட்டச் சொல்லி அழுகின்றது என் கருதி? ('காட்ட' என்பதற்கு ஏற்ற செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. 'இன்றும் தாமே காட்டுதல் அல்லது யாம் காட்டுதல் யாண்டையது'? என்பதாம்.)