தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் பைதல் உழப்ப தெவன்.1172 (இதுவும் அது.) தெரிந்து உணரா நோக்கிய உண்கண் - மேல் விளைவதனை ஆராய்ந்தறியாது அன்று காதலரை நோக்கி நின்ற உண்கண்கள்; பரிந்து உணராப் பைதல் உழப்பது எவன் - இன்று இது நம்மால் வந்ததாகலின் பொறுத்தல் வேண்டும் எனக் கூறுபடுத்துணராது துன்பம் உழப்பது என் கருதி? (விளைவது: பிரிந்து போயவர் வாராமையின் காண்டற்கு அரியராய் வருத்துதல், முன்னே வருவதறிந்து அது காவாதார்க்கு அது வந்தவழிப் பொறுத்தலன்றேயுள்ளது? அதுவும் செய்யாது வருந்துதல் கழிமடச் செய்கை என்பதாம்.) கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்க துடைத்து. 1173 (இதுவும் அது.) தாம் கதுமென நோக்கித் தாமே கலுழும் இது - இக்கண்கள் அன்று காதலரைத் தாமே விரைந்து நோக்கி இன்றும் தாமே இருந்தழுகின்ற இது; நகத்தக்கது உடைத்து - நம்மால் சிரிக்கத்தக்க இயல்பினை உடைத்து. ('கண்கள்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'இது' என்றது மேற்கூறிய கழிமடச் செய்கையை. அது வருமுன்னர்க் காப்பார்க்கு நகை விளைவிக்கும் ஆகலான் 'நகத்தக்கது உடைத்து' என்றாள்.) பெயல்ஆற்றா நீர்உலந்த உண்கண் உயல்ஆற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து. 1174 (இதுவும் அது). உண்கண் -உண்கண்கள்; உயலாற்றா உய்வு இல் நோய் செய்வன. என் கண் நிறுத்து-அன்று யான் உய்ய மாட்டாமைக்கு ஏதுவாய ஒழிவில்லாத நோயை என் கண்ணே நிறுத்தி; பெயலாற்றா நீர் உலந்த - தாமும் அழுதலை மாட்டாவண்ணம் நீர் வற்றிவிட்டன. (நிறுத்தல்: பிரிதலும் பின் கூடாமையும் உடையாரைக் காட்டி அதனால் நிலைபெறச் செய்தல். 'முன் எனக்கு இன்னாதன செய்தலாற் பின் தமக்கு இன்னாதன தாமே வந்தன' என்பதாம்.)
|