'('மறை' என்றது ஈண்டு மறைக்கப்படுவதனை. அகத்து நிகழ்வதனைப் புறத்துள்ளார்க்குஅறிவித்தலாகிய தொழிலாம் ஒற்றுமை உண்மையின் 'அறைபறையாகிய கண்' என்றாள். இங்ஙனம் செய்யுள் விகாரமாக்காது, 'அறைபறைக் கண்ணார்'என்று பாடம் ஓதுவாரும் உளர். 'யான் மறைக்கவும் இவை வெளிப்படுத்தா நின்றன' என்பதாம்.) அதிகாரம் 119. பசப்புறு பருவரல் [ அது, பசப்புற்ற பருவரல் என விரியும். அஃதாவது, பசப்புறுதலானாய வருத்தம். இதனைப் 'பந்தெறிந்த வயா' (கலித், குறிஞ் .3) என்பதுபோலக் கொள்க. பசப்பாவது, பிரிவாற்றாமையான் வருவதோர் நிறவேறுபாடு. இது, தலைமகனைக் காணப் பெறாதவழி நிகழ்வதாகலின், கண் விதுப்பு அழிதலின்பின் வைக்கப்பட்டது .] நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தஎன் பண்பியார்க் குரைக்கோ பிற.1181 (முன் பிரிவுடம்பட்ட தலைமகள் அஃது ஆற்றாது பசந்தவழித் தன்னுள்ளே சொல்லியது.) நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் - என்னை நயந்தவர்க்கு அது பொழுது பிரிவை உடம்பட்ட நான்; பசந்த என் பண்பு யார்க்கு உரைக்கோ - அதனை ஆற்றாது இது பொழுது பசந்த என் இயல்பினை யார்க்குச் சொல்வேன்? ('பிற' என்பது அசைநிலை. உடம்படாவழி ஒழிதல் குறித்துப் பிரிவுணர்த்தினராகலின் அவரன்புடையர் என்னும் கருத்தான் 'நயந்தவர்' என்றும், இதுவே உடம்பாடாக மேலும் பிரிவு நிகழுமாகலின், இனி அவரைக் கூடுதலரிது என்னும் கருத்தான் 'நல்காமை' என்றும், முன்னர் உடம்படுதலும் பின்னர் ஆற்றாது பசத்தலும் பிறர் செய்தனவல்ல என்பாள் 'பசந்த என் பண்பு' என்றும், யான் செய்துகொண்ட துன்பத்தினை இனி ஒருவருக்குச் சொல்லலும் பழியாம் என்னும் கருத்தால் 'யார்க்கு உரைக்கோ' என்றும் கூறினாள்.)அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென் மேனிமேல் ஊரும் பசப்பு. 1182 (ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவல் என்பது படச் சொல்லியது.) (யான் ஆற்றியுளேனாகவும்) பசப்பு - இப்பசப்புத்தான்; தந்தார் அவர் என்னும் தகையால் - என்னையுண்டாக்கினார் அவர் என்னும் பெருமிதத்தான்; என் மேனிமேல் இவர்தந்து ஊரும் - என் மேனியை மேற்கொண்டு செலுத்தா நின்றது.
|