யார்மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்கு - எல்லார் மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை உடையார்க்கு; துன்பு உறூஉம் துவ்வாமை இல்லாகும் - துன்பத்தை மிகுவிக்கும் நல்குரவு இல்லையாம். (நா முதலிய பொறிகள் சுவை முதலிய புலன்களை நுகராமை உடைமையின், 'துவ்வாமை' என்றார். 'யார் மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்குப் பகையும் நொதுமலும் இன்றி உள்ளது நட்பேஆம், ஆகவே அவர் எல்லாச் செல்வமும் எய்துவர்' என்பது கருத்து.) பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணிஅல்ல மற்றுப் பிற. 95 ஒருவற்கு அணி பணிவு உடையன் இன்சொலன் ஆதல் - ஒருவனுக்கு அணியாவது தன்னால் தாழப்படுவார்கண் தாழ்ச்சியுடையனாய் எல்லார் கண்ணும் இனிய சொல்லையும் உடையனாதல், பிற அல்ல - அன்றி மெய்க்கு அணியும் பிற அணிகள் அணி ஆகா. (இன்சொலனாதற்கு இனமாகலின், பணிவுடைமையும் உடன் கூறினார். 'மற்று' அசை நிலை. வேற்றுமை உடைமையான், பிற எனவும், இவைபோலப் பேரழகு செய்யாமையின் 'அல்ல' எனவும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் இனியவை கூறுவார்க்கு இம்மைப் பயன் கூறப்பட்டது.) அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின். 96 நல்லவை நாடி இனிய சொலின் - பொருளால் பிறர்க்கு நன்மை பயக்கும் சொற்களை மனத்தான் ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுமாயின்; அல்லவை தேய அறம் பெருகும் - அவனுக்குப் பாவங்கள் தேய அறம் வளரும். (தேய்தல் : தன் பகை ஆகிய அறம் வளர்தலின் தனக்கு நிலையின்றி மெலிதல். "தவத்தின்முன் நில்லாதாம் பாவம்" (நாலடி.51) என்பதூஉம் இப்பொருட்டு. நல்லவை நாடிச் சொல்லுங்காலும் கடியவாகச் சொல்லின், அறன் ஆகாது என்பதாம். இதனான் மறுமைப்பயன் கூறப்பட்டது.) நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல். 97
|