பக்கம் எண் :

473
(இதுவும் அது.) வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே - தாம் விழையும் கணவரான் விழையப்படும் மகளிர்க்கு ஏற்புடைத்து ; வாழுநம் என்னும் செருக்கு - காதலர் பிரிந்தாராயினும் நம்மை நினைந்து கடிதின் வருவர்; வந்தால் நாம் இன்புற்று வாழ்தும் என்றிருக்கும் தருக்கு. ('நாம் அவரான் வீழப்படாமையின், நமக்கு அமைவது இறந்துபாடு' என்பதாம்.)

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.

1194
('காதலரை இயற்பழித்தலை அஞ்சி அவரருளின்மை மறைத்த நீ கடவுட் கற்பினையாகலின், கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுதி', என்ற தோழிக்குச் சொல்லியது.) வீழப்படுவார் - கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுவாரும்; தாம் வீழ்வார் வீழப்படார் எனின் கெழீஇயிலர் - தாம் விரும்பும் கணவரான் விரும்பப் படாராயின் தீவினையாட்டியர்.(சிறப்பு உம்மை, விகாரத்தால் தொக்கது. கெழீஇயின்மை: நல்வினையின்மை; அஃது அருத்தாபத்தியால் தீவினையுடைமையாயிற்று. 'தீவினையுடையோற்கு அந்நன்கு மதிப்பால் பயனில்லை', என்பதாம்.)

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.

1195
('அவர்மேற் காதலுடைமையின் அவர் கருத்தறிந்து ஆற்றினாய்', என்ற தோழிக்குச் சொல்லியது.) நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்ப - நம்மால் காதல் செய்யப்பட்டவர் நமக்கு என்ன இன்பத்தைச் செய்வர்; தாம் காதல் கொள்ளாக்கடை - அவ்வாறே தாமும் நம்கண் காதல் செய்யாவழி. (எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'அக்காதல் உடைமையால் நாம் பெற்றது துன்பமே' என்பதாம்.)

ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.

1196
(இதுவும் அது.) காமம் ஒரு தலையான் இன்னாது - மகளிர் ஆடவர் என்னும் இரு தலையினும் வேட்கை ஒருதலைக்கண்ணேயாயின், அஃது இன்னாது; காப்போல இருதலையானும் இனிது - காவினது பாரம்போல இருதலைக்கண்ணும் ஒப்பின் அஃது இனிது.