பக்கம் எண் :

474

(மூன்றன் உருபுகள் ஏழன் பொருண்மைக் கண் வந்தன. கா -ஆகுபெயர். 'என்மாட்டு உண்டாய வேட்கை அவர் மாட்டும்உண்டாயின், யான் இவ்வாறு துன்பமுழத்தல் கூடுமோ'?என்பதாம்.)

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.
1197
(இதுவும் அது.) ஒருவர்கண் நின்று ஒழுகுவான் காமன் - காமம் நுகர்தற்கு உரிய இருவரிடத்தும் ஒப்பநிற்றல் ஒழிந்து ஒருவரிடத்தே நின்று பொருகின்ற காமக் கடவுள்; பருவரலும் பைதலும் காணான்கொல் - அவ்விடத்துப் பசப்பானாய பருவரலும் படர் மிகுதியும் அறியான் கொல்லோ. ('விழைவும் வெறுப்பும் இன்றி எல்லார்கண்ணும் நிகழ்ந்தன அறிதற்குரிய கடவுளும் என்கண் வேறுபட்டான், இனி யான் உய்யுமாறு என்னை'? என்பதாம்.)

வீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

1198
(தலைமகன் தூது வரக்காணாது சொல்லியது.) வீழ்வாரின் இன்சொல் பெறாது வாழ்வாரின் - தம்மால் விரும்பப்படும் காதலர் திறத்துநின்றும்ஓர் இன்சொல்லளவும் பெறாதே பிரிவாற்றி உயிர் வாழ்கின்ற மகளிர் போல; வன்கணார் உலகத்து இல் - வன்கண்மையுடையார் இவ்வுலகத்து இல்லை. ('காதலர்திறத்துச் சொல் யாதானும் எனக்கு இனிது', என்னும் கருத்தால் 'இன்சொல்' என்றாள். இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. யான் வன்கண்ணேனாகலின் அதுவும் பெறாது உயிர் வாழாநின்றேன் என்பதாம்.)

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்
டிசையும் இனிய செவிக்கு.

1199
(இதுவும் அது.) நசைஇயார் நல்கார் எனினும் - என்னால் நச்சப்பட்ட காதலர் என்மாட்டு அன்பிலரேயாயினும்; அவர்மாட்டு இசையும் செவிக்கு இனிய - அவர் திறத்து யாதானும் ஓர் சொல்லும் என் செவிக்கு இனியவாம்.