(இழிவு சிறப்பு உம்மை, 'அவர் வாரார் என்னுஞ் சொல்லாயினும் அமையும்' என்பதுபட நின்றது. 'அதுவும் பெற்றிலேன்'என்பதாம்.) உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅய் வாழிய நெஞ்சு. 1200 (தலைமகன் தூது வரப்பெறாது தான் தூதுவிடக் கருதியாள் நெஞ்சோடு சொல்லியது.) உறார்க்கு உறுநோய் உரைப்பாய் நெஞ்சு - நின்னோடு உறாதார்க்கு நின் நோயை உரைக்கலுற்ற நெஞ்சே; கடலைச் செறாய் - நீ ஆற்றாயாயினும் அரிதாய அதனையொழிந்து, நினக்குத் துயரஞ் செய்கின்ற கடலைத் தூர்க்க முயல்வாயாக, அஃது எளிது. (உரைக்கலுற்றது அளவிறந்த நோயாகலானும், கேட்பார் உறவிலராகலானும், அது முடிவதொன்று அன்று; முடிந்தாலும் பயன் இல்லை என்பது கருதாது, முயலாநின்றாய் என்னும் குறிப்பான், 'வாழிய' என்றாள்.) அதிகாரம் 121. நினைந்தவர் புலம்பல்[ அஃதாவது , முன் கூடிய ஞான்றே இன்பத்தினை நினைந்து தலைமகள் தனிமை எய்தலும், பாசறைக்கண் தலைமகன் தனிமை எய்தலுமாம் . இவ்வாறு இருவர்க்கும் பொதுவாதல் பற்றிப் பன்மைப்பாலாற் கூறப்பட்டது. இது படர் மிகுதி தன்கண்ணதாக நினைந்த தலைமகட்கும் உரித்தாகலின் அவ்வியைபுபற்றித் தனிப்படர் மிகுதியின்பின் வைக்கப்பட்டது.] உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது. 1201 (தூதாய்ச் சென்ற பாங்கனுக்குத் தலைமகன் சொல்லியது.) உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்- முன் கூடிய ஞான்றை இன்பத்தினைப் பிரிந்துழி நினைத்தாலும் அதுபொழுது பெற்றாற்போல நீங்காத மிக்க மகிழ்ச்சியைத் தருதலால்; கள்ளினும் காமம் இனிது - உண்டுழியல்லது மகிழ்ச்சி செய்யாத கள்ளினும் காமம் இன்பம் பயத்தல் உடைத்து.
|