(தன் தனிமையும், தலைமகளை மறவாமையும் கூறியவாறு) எனைத்தொன் றினிதேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன் றில்.1202 (இதுவும் அது.) தாம் வீழ்வார் நினைப்ப வருவது ஒன்று இல் - தம்மால் விரும்பப் படுவாரைப் பிரிவின்கண் நினைத்தால் அந்நினைவார்க்கு அப்பிரிவின் வருவதோர் துன்பம் இல்லையாம்; காமம் எனைத்து இனிது ஒன்றே காண் - அதனால் காமம் எத்துணையேனும் இனிதொன்றே காண். (புணர்ந்துழியும் பிரிந்துழியும் ஒப்ப இனிது என்பான், 'எனைத்தும் இனிது' என்றான். சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தான் ஆற்றிய வகை கூறியவாறு.) நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும். 1203 (தலைமகனை நினைந்து வருந்துகின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) தும்மல் சினைப்பது போன்று கெடும் - எனக்குத் தும்மல் எழுவது போன்று தோன்றிக் கெடாநின்றது; நினைப்பவர் போன்று நினையார்கொல் - அதனால் காதலர் என்னை நினைப்பார் போன்று நினையாராகல் வேண்டும். (சினைத்தல்: அரும்புதல். சேய்மைக்கண்ணராய கேளிர் நினைந்துழி அந்நினைக்கப்பட்டார்க்குத் துமமல் தோன்றும் என்னும் உலகியல்பற்றித் தலைமகன் எடுத்துக்கொண்ட வினை முடிவதுபோன்று முடியாமை யுணர்ந்தாள் சொல்லியதாயிற்று.) யாமும் உளேம்கொல் அவர்நெஞ்சத் தெம்நெஞ்சத் தோஒ உளரே அவர். 1204 (இதுவும் அது.) எம் நெஞ்சத்து அவர் ஓ உளரே - எம்முடைய நெஞ்சத்து அவர் எப்பொழும் உளரேயாய் இராநின்றார்; அவர் நெஞ்சத்து யாமும் உளேங்கொல் - அவ்வகையே அவருடைய நெஞ்சத்தும் யாமும் உளமாதுமோ, ஆகேமோ? (ஓகார இடைச்சொல் ஈண்டு இடைவிடாமை உணர்த்தி நின்றது. 'உளமாயும், வினை முடியாமையின் வாராராயினாரோ, அது முடிந்தும் இலமாகலின் வாராராயினாரோ?' என்பது கருத்து.)
|