எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ காதலர் செய்யும் சிறப்பு.1208 (இத்துன்பம் அறிந்து வந்து காதலர் நினக்கு இன்பம் செய்வர் என்றாட்குச் சொல்லியது.) எனைத்து நினைப்பினும் காயார் - தம்மை யான் எத்துணையும் மிக நினைந்தாலும் அதற்கு வெகுளார்; காதலர் செய்யும் சிறப்பு அனைத்து அன்றோ-காதலர் எனக்குச் செய்யும் இன்பமாவது அவ்வளவன்றோ? (வெகுளாமை:அதற்கு உடன்பட்டு நெஞ்சின் கண் நிற்றல். தனக்கு அவ்வின்பத்திற் சிறந்தது இன்மையின் அதனைச் 'சிறப்பு' என்றாள். 'காதலர் நம்மாட்டருள்' என்றும் 'செய்யுங் குணம்' என்றும் பாடம் ஓதுவாரும் உளர். தோழி கூறிய அதனைக் குறிப்பான் இகழ்ந்து கூறியவாறு.) விளியும்என் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளிஇன்மை ஆற்ற நினைந்து. 1209 (தலைமகன் தூது வரக் காணாது வருந்துகின்றாள், வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது) வேறு அல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து - முன்பெல்லாம் நாம் இருவரும் வேறல்லம் என்று சொல்லுவாரது அளியின்மையை மிகவும் நினைந்து: என் இன்னுயிர் விளியும்-எனது இனிய உயிர் கழியாநின்றது. (அளியின்மை - பின் வருவாராகலுமாய்ப் பிரிதலும், பிரிந்து வாராமையும், ஆண்டு நின்றுழித் தூது விடாமையும் முதலாயின. பிரிவாற்றல் வேண்டும் என வற்புறுத்தாட்கு, 'என்னுயிர் கழிகின்றது பிரிவிற்கு அன்று; அவரன்பின்மைக்கு' என எதிர்அழிந்து கூறியவாறு) விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி. 1210 (வன்புறை எதிரழிந்தாள் காமம் மிக்க கழிபடரால் சொல்லியது) மதி-மதியே; விடாது சென்றாரைக் கண்ணினால் காணப்படாதி - என் நெஞ்சின் இடைவிடாதிருந்தே விட்டுப் போயினாரை யான் என் கண்ணளவானாயினும் எதிர்ப்படும் வகை நீ படாதொழிவாயாக.
|