பக்கம் எண் :

48

நயன் ஈன்று நன்றி பயக்கும் - ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும்: பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் - பொருளால் பிறர்க்கு நன்மையைக் கொடுத்து இனிமைப் பண்பின் நீங்காத சொல். (நீதி: உலகத்தோடு பொருந்துதல். 'பண்பு' என்பது ஈண்டு அதிகாரத்தான் இனிமைமேல் நின்றது. தலைப்பிரிதல் - ஒரு சொல் நீர்மைத்து.)

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பந் தரும்.

98

சிறுமையுள் நீங்கிய இன்சொல் - பொருளால் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல்; மறுமையும் இம்மையும் இன்பம் தரும் - ஒருவனுக்கு இருமையினும் இன்பத்தைப் பயக்கும். (மறுமை இன்பம் பெரிதாகலின், முன் கூறப்பட்டது. இம்மை இன்பமாவது, உலகம் தன் வயத்ததாகலான் நல்லன எய்தி இன்புறுதல். இவை இரண்டு பாட்டானும் இருமைப்பயனும் ஒருங்கு எய்துதல் வலியுறுத்தப்பட்டது.) 

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.
99

இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் - பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பம் பயத்தலை அனுபவித்து அறிகின்றவன்; வன்சொல் வழங்குவது எவன்கொல் - அது நிற்கப் பிறர்மாட்டு வன்சொல்லைச் சொல்வது என்ன பயன் கருதி? ('இனிது' என்றது வினைக்குறிப்புப் பெயர். கடுஞ்சொல் பிறர்க்கும் இன்னாதாகலின், அது கூறலாகாது என்பது கருத்து.) 

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
100

இனிய உளவாக இன்னாதகூறல் - அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க, அவற்றைக் கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல்; கனி இருப்பக் காய் கவர்ந்தற்று - இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க, அவற்றை நுகராது காய்களை