(கலவி விட்டு மறையும் கடுமைபற்றி 'விரைந்து' என்றாள். ஒருகாலும் என்னின் நீங்கி அறியாதாரை நீ நோவற்பாலை யல்லை என்பதாம்.) நனவினால் நல்காரை நோவர் கனவினால் காதலர்க் காணா தவர்.1219 (இதுவும் அது.) கனவினான் காதலர்க் காணாதவர் - தமக்கு ஒரு காதலர் இன்மையின் அவரைக் கனவிற் கண்டறியாத மகளிர்; நனவினான் நல்காரை நோவர் - தாம் அறிய நனவின்கண் வந்து நல்காத நம் காதலரை அன்பிலர் என நோவர் நிற்பர். (இயற்பழித்தது பொறாது புலக்கின்றாள் ஆகலின், அயன்மை தோன்றக் கூறினாள். தமக்கும் காதலருளராய அவரைக் கனவிற் கண்டறிவாராயின், நம் காதலர் கனவின்கண் ஆற்றி நல்குதல் அறிந்து நோவார் என்பதாம்.)நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான் காணார்கொல் இவ்வூ ரவர். 1220 (இதுவும் அது.) இவ்வூரவர் நனவினான் நம் நீத்தார் என்பார் - மகளிர் நனவின்கண் நம்மை நீத்தார் என்று நம் காதலரைக் கொடுமை கூறாநிற்பார்; கனவினான் காணார்கொல் - அவர் கனவின்கண் நீங்காது வருதல் கண்டறியாரோ? ('என்னொடு தன்னிடை வேற்றுமை இன்றாயின், யான் கண்டது தானும் கண்டமையும், அது காணாது அவரைக் கொடுமை கூறுகின்றமையின் அயலாளேயாம்' என்னும் கருத்தால், 'இவ்வூரவர்' என்றாள்.) அதிகாரம் 123. பொழுதுகண்டு இரங்கல்[ அஃதாவது, மாலைப்பொழுது வந்துழி, அதனைக் கண்டு தலைமகள் இரங்குதல். 'கனா முந்துறாத வினையில்லை' (பழமொழி.2) என்பதுபற்றிப் பகற்பொழுது ஆற்றிஇருந்தாட்கு உரியதாகலின், இது கனவு நிலை உரைத்தலின் பின் வைக்கப் பட்டது.]
|