பக்கம் எண் :

485

மாலை நோய் செய்தல் -முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ்செய்து போந்த மாலை இன்று பகையாய்த் துன்பஞ்செய்தலை; மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன் -காதலர் பிரிதற்கு முன்னே அறியப் பெற்றிலேன். ('இங்ஙனம் வேறுபடுதல் அறிந்திலேன்: அறிந்தேனாயின், அவர் பிரிவிற்கு உடம்படேன்', என்பதாம்.)

காலை அரும்பிப் பகல்எல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.
1227
('மாலைப் பொழுதின்கண் இனையையாதற்குக் காரணம் என்னை'? என்றாட்குச் சொல்லியது.) இந்நோய் - இக்காமநோயாகிய பூ; காலை அரும்பி - காலைப் பொழுதின்கண் அரும்பி; பகல் எல்லாம் போது ஆகி - பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் முதிர்ந்து; மாலை மலரும் - மாலைப் பொழுதின்கண் மலராநிற்கும். (துயிலெழுந்த பொழுதாகலின் கனவின்கண் கூட்டம் நினைந்து ஆற்றுதல்பற்றி, 'காலை அரும்பி' என்றும், பின் பொழுது செலச்செல அது மறந்து பிரிவுள்ளி ஆற்றாளாதல் பற்றிப் 'பகலெல்லாம் போதாகி' என்றும் , தத்தம் துணையை உள்ளி வந்து சேரும் விலங்குகளையும் மக்களையும் கண்டு, தான் அக்காலத்தின் நுகர்ந்த இன்பம் நினைந்து ஆற்றாமை மிகுதிபற்றி 'மாலை மலரும்' என்றும் கூறினாள். 'பூப்போல இந்நோய் காலவயத்ததாகாநின்றது' என்பது உருவகத்தால் பெறப்பட்டது. ஏகதேச உருவகம்.)

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.

1228
(இதுவும் அது.) ஆயன் குழல் - முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல்; அழல் போலும் மாலைக்குத் தூதாகி - இது பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய்; கொல்லும்படை-அது வந்து என்னை கொல்வுழிக் கொல்லும் படையும் ஆயிற்று. (பின்னின்ற 'போலும்' என்பது உரையசை. முன்னரே வரவுணர்த்தலின் தூதாயிற்று; கோறற் கருவியாகலின் படையாயிற்று. 'தானே சுடவல்ல மாலை, இத்துணையும் பெற்றால் என் செய்யாது'? என்பதாம்.)