பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து.1229 (இதுவும் அது.) (இதற்கு முன்னெல்லாம் யானே மயங்கி நோயுழந்தேன்) மதி மருண்டு மாலை படர்தரும் போழ்து - இனிக் கண்டாரும் மதி மருளும் வகை மாலை வரும்பொழுது; பதி மருண்டு பைதல் உழக்கும் - இப்பதியெல்லாம் மயங்கி நோயுழக்கும். ('மதி மருள' என்பது 'மதி மருண்டு' எனத் திரிந்து நின்றது. கூற்றமாகக் கருதிக் கூறினாளாகலின் 'மாலை படர்தரும் போழ்து' என்றாள். 'யான் இறந்து படுவல்' என்பதாம். 'மாலை மயங்கி வரும் போழ்து என் மதி நிலை கலங்கி நோயும் உழக்கும்' என்று உரைப்பாரும் உளர்.)பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயும்என் மாயா உயிர். 1230 (இதுவும் அது.) மாயா என் உயிர் -காதலர் பிரிவைப் பொறுத்து இறந்துபடாதிருந்த என் உயிர்; பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை மாயும் - இன்று பொருளியல்பே தமக்கியல்பாக உடையவரை நினைந்து, இம்மயங்கும் மாலைக்கண்ணே இறந்துபடாநின்றது. ('குறித்த பருவம் கழியவும், பொருள் முடிவு நோக்கி வாராமையின் சொல் வேறுபடாமையாகிய தம்மியல்பு ஒழிந்தவர் அப்பொருளியல்பே தம் இயல்பாயினார், காலம் இதுவாயிற்று, இனி நீ சொல்கின்றவாற்றால் பயனில்லை', என்பதாம்.) அதிகாரம் 124. உறுப்பு நலன் அழிதல்[ அஃதாவது , தலைமகள்தன் கண்ணும் , தோளும் , நுதலும் முதலாய அவயவங்கள் தம் அழகு அழிதல் . இஃது இரக்கம் மிக்குழி நிகழ்வதாகலின் , பொழுது கண்டு இரங்கலின் பின் வைக்கப்பட்டது.]
சிறுமை நமக்கொழியச் சேண்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண். 1231 (ஆற்றாமை மிகுதியான் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.) சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றார் உள்ளி - இவ்வாற்றாமை நம்கண்ணே நிற்பத் தாம் சேணிடைச் சென்ற காதலரை நீ நினைந்து அழுதலால்; கண் நறுமலர் நாணின - நின் கண்கள் ஒளியிழந்து முன் தமக்கு நாணிய நறுமலர்கட்கு இன்று தாம் நாணிவிட்டன.
|