பக்கம் எண் :

490

(தண்மை - ஈண்டு மென்மைமேல் நின்றது. 'போழ' என்றது, உடம்பு இரண்டும் ஒன்றானது தோன்ற நின்றது. மழை - குளிர்ச்சி)

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.
1240
(இதுவும் அது.) கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்று - தண் வளி போழவந்த கண்ணின் பசப்புத் துன்பமுற்றது; ஒண்ணுதல் செய்தது கண்டு. தனக்கு அயலாய ஒண்ணுதல் விளைத்த பசப்பைக் கண்டு. ('அது கைகளை ஊக்க அவ்வளவில் பசந்தது, யான் கைகளையும் ஊக்கி மெய்களும் நீங்கிச் சிறுகாற்று ஊடறுக்கும் துணையும் பசந்திலன்', எனத் தன் வன்மையும் அதன் மென்மையும் கருதி வெள்கிற்று என்பதாம், ஆகவே, 'அவளுறுப்புக்கள் ஒன்றினொன்று முற்பட்டு நலன் அழியும் , யாம் கடிதிற் சேறும்' என்பது கருத்தாயிற்று.)

அதிகாரம் 125. நெஞ்சொடு கிளத்தல்

[ அஃதாவது , ஆற்றாமை மீதூரத் தனக்கு ஓர் பற்றுக்கோடு காணாத் தலைமகள் தன் நெஞ்சொடு செய்திறன் அறியாது சொல்லுதல் . இஃது , உறுப்புக்கள் தம் நலனழிந்தவழி நிகழ்வதாலின் , உறுப்பு நலன் அழிதலின்பின் வைக்கப்பட்டது.]

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

1241
(தன் ஆற்றாமை தீரும் திறன் நாடியது.) நெஞ்சே - நெஞ்சே; எவ்வநோய் தீர்க்கும் மருந்து ஒன்று - இவ்வெவ்வநோயினைத் தீர்க்கும் மருந்தாவதொன்றனை; எனைத்து ஒன்றும் நினைத்துச் சொல்லாய் - யான் அறியுமாற்றலிலன், எத்தன்மையது யாதொன்றாயினும் நீ அறிந்து எனக்குச் சொல். (எவ்வம் - ஒன்றானும் தீராமை. உயிரினும் சிறந்த நாணினை விட்டுச் செய்வது யாதொன்றாயினும் என்பாள், 'எனைத்தொன்றும்' என்றாள்.)

காதல் அவர்இலர் ஆகநீ நோவது
பேதமை வாழிஎன் நெஞ்சு.

1242
(தலைமகனைக் காண்டற்கண் வேட்கை மிகுதியால் சொல்லியது.) என் நெஞ்சு வாழி - என் நெஞ்சே, வாழ்வாயாக; அவர் காதல் இலராக நீ நோவது - அவர் நம்கண் காதல் இலராகவும் நீ அவர் வரவு நோக்கி வருந்துதற்கு ஏது; பேதைமை - நின் பேதைமையே, பிறிதில்லை.