பக்கம் எண் :

496
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.
1256
(இதுவும் அது.) செற்றவர் பின் சேறல் வேண்டி - என்னை அகன்று சென்றார் பின்னே யான் சேறலை வேண்டுதலான்; என்னை உற்ற துயர் எற்று அளித்து - என்னை உற்ற துயர் எத்தன்மையது? சால நன்று. (செற்றவர் என்றது ஈண்டும், அப்பொருட்டு. 'வேண்ட' என்பது, 'வேண்டி' எனத் திரிந்து நின்றது. 'அளித்து' என்பது இகழ்ச்சிக் குறிப்பு. 'இக்காமநோய் யான் சொல்லவும் கேட்கவும் ஆவதொன்றன்று; சாலக்கொடிது' என்பதாம்.)

நாண்என ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.

1257
(பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு நிறையழிவாற் கூடிய தலைமகள் 'நீ புலவாமைக்குக் காரணம் யாது?' என்ற தோழிக்குச் சொல்லியது.) பேணியார் காமத்தாற் பெட்பசெயின் - நம்மால் விரும்பப்பட்டவர் வந்து காமத்தால் நாம் விரும்பியவற்றைச் செய்யுமளவில்; நாண் என ஒன்றோ அறியலம் - நாண் என்றொன்றையும் அறிய மாட்டேமாயிருந்தோம். ('பேணியார்' எனச் செயப்படுபொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. விரும்பியன - வேட்கை மிகலினாற் கருதியிருந்த கலவிகள். நாண் - பரத்தையர் தோய்ந்த மார்பைத் தோய்தற்கு நாணுதல். 'ஒன்று' என்பது ஈண்டுச் 'சிறிது' என்னும் பொருட்டு. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. நிறையழிவான் அறியாது கூடிய தன் குற்றம் நோக்கி, அவளையும் உளப்படுத்தாள்.)

பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.

1258
(இதுவும் அது.) நம் பெண்மை உடைக்கும் படை - நம் நிறையாகிய அரணை அழிக்கும் தானை; பல் மாயக் கள்வன் பணிமொழியன்றோ - பல பொய்களை வல்ல கள்வனுடைய தாழ்ந்த சொற்களன்றோ? ஆனபின் அது நிற்குமாறென்னை?