(பெண்மை ஈண்டுத் தலைமைபற்றி நிறைமேல் நின்றது. 'வந்தாற் புலக்கக் கடவேம்' என்றும், 'புலந்தால் அவன் சொற்களானும் செயல்களானும் நீங்கேம்' என்றும், இவை முதலாக எண்ணிக்கொண்டிருந்தன யாவும் காணாது கலவிக்கண் தன்னினும் முற்படும் வகை வந்து தோன்றினான் என்பாள், 'பன்மாயக்கள்வன்' என்றாள். பணிமொழி - தம்மினும் தான் அன்பு மிகுதியுடையனாகச் சொல்லுஞ் சொற்கள். 'அவன்அத்தன்மையனாக, சொற்கள் அவையாக, நம் நிறையழியாயது ஒழியுமோ'? என்பதாம்.) புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு.1259 (இதுவும் அது.) புலப்பல் எனச் சென்றேன் - அவர் வந்த பொழுது புலக்கக் கடவேன் என்று கருதி, முன் நில்லாது பிறிதோரிடத்துப் போயினேன்; நெஞ்சம் கலத்தலுறுவது கண்டு புல்லினேன் - போயும், என் நெஞ்சம் நிறையின் நில்லாது அறைபோய் அவரோடு கலத்தல் தொடங்குதலை அறிந்து, 'இனி அது வாயாது' என்று புல்லினேன் (வாயாமை - புலத்தற்கருவியாய நெஞ்சு தானே கலத்தற்கருவியாய் நிற்றலின் அது முடியாமை.)நிணம்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ புணர்ந்தூடி நிற்பேம் எனல். 1260 (இதுவும் அது.) நிணம் தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு - நிணத்தைத் தீயின்கண்ணே யிட்டால் அஃது உருகுமாறு போலத் தம் காதலரைக் கண்டால் நிறையழிந்து உருகும் நெஞ்சினையுடைய மகளிர்க்கு; புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் உண்டோ - அவர் புணர யாம் ஊடிப் பின்பு உணராது அந்நிலையே நிற்கக்கடவேம் என்று கருதுதல் உண்டாகுமோ? ஆகாது. (புணர்தல் - ஈண்டு மிக நணுகுதல்; எதிர்ப்படுதலுமாம். 'புணர' என்பது 'புணர்ந்து' எனத் திரிந்து நின்றது. 'யான் அத்தன்மையேன் ஆகலின் எனக்கு அஃது இல்லையாயிற்று', என்பதாம்.) அதிகாரம் 127. அவர்வயின் விதும்பல்[ அஃதாவது , சேயிடைப் பிரிவின்கண் தலைமகனும் தலைமகளும் வேட்கை மிகவினான் ஒருவரை யொருவர் காண்டற்கு விரைதல் . தலைமகற் பிரிவும் தலைமகள் ஆற்றாமையும் அதிகாரப்பட்டு வருகின்றமையின் இருவரையும் சுட்டிப் பொதுவாகிய பன்மைப் பாலாற் கூறினார்.
|