பிறரெல்லாம் இதனைத் ' தலைமகன் நினைந்து தலைமகள் விதுப்புறல் ' என்றார் . ' சுட்டுப் பெயர் ' சொல்லுவான் குறிப்பொடு கூடிய பொருள்உணர்த்துவதல்லது , தான் ஒன்றற்குப் பெயராகாமையானும் ,கவிக் கூற்றாய அதிகாரத்துத் தலைமகன் உயர்த்தற்பன்மையாற் கூறப்படாமையானும் அஃது உரையன்மை அறிக .இதனுள் தலைமகள் கூற்று நிறையழிவான் நிகழ்ந்ததாகலின் ,அவ்வியைபுபற்றி நிறை அழிதலின் பின் வைக்கப்பட்டது.]
வாள்அற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாள்ஒற்றித் தேய்ந்த விரல்.1261 (தலைமகள் காண்டல் விதுப்பினால் சொல்லியது.) அவர் சென்ற நாள் ஒற்றி விரல் தேய்ந்த - அவர் நம்மைப் பிரிந்து போன நாள்கள் சுவரின்கண் இழைத்தவற்றைத் தொட்டு எண்ணுதலான் என் விரல்கள் தேய்ந்தன; கண்ணும் வாள் அற்றுப் புற்கென்ற - அதுவேயன்றி அவர் வரும் வழிபார்த்து என் கண்களும் ஒளியிழந்து புல்லியவாயின: இவ்வாறாயும் அவர் வரவு உண்டாயிற்றில்லை. (நாள் - ஆகுபெயர். புல்லியவாதல் - நுண்ணிய காணமாட்டாமை. 'ஒற்ற' என்பது 'ஒற்றி' எனத் திரிந்து நின்றது. இனி யான் காணுமாறு என்னை? என்பதாம். நாள் எண்ணலும் வழி பார்த்தலும் ஒருகாற் செய்தொழியாது இடையின்றிச் செய்தலான், விதுப்பாயிற்று.)இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல் கலங்கழியும் காரிகை நீத்து. 1262 (ஆற்றாமை மிகுதலின் இடையின்றி நினைக்கற்பாலை யல்லை; சிறிது மறக்கல் வேண்டும், என்ற தோழிக்குச் சொல்லியது.) இலங்கு இழாய் - விளங்காநின்ற இழையினை யுடையாய்; இன்று மறப்பின் - காதலரை இன்று யான் மறப்பேனாயின்; மேல் காரிகை நீத்து என்தோள் கலங்கழியும் - மேலும் காரிகை என்னை நீப்ப என் தோள்கள் வளை கழல்வனவாம். ('இலங்கிழாய்' என்பது 'இதற்கு நீ யாதும் பரியலை' என்னும் குறிப்பிற்று. இன்று - யான் இறந்துபடுகின்ற இன்று. மேலும் - மறுபிறப்பினும். எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'நீப்ப' என்பது , 'நீத்து' எனத் திரிந்து நின்றது. கழியும் என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது.
|