பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. 103 பயன்தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் - இவர்க்கு இது செய்தால் இன்னது பயக்கும் என்று ஆராய்தல் இலராய்ச் செய்த உதவியாகிய ஈரமுடைமையை ஆராயின்; நன்மை கடலின் பெரிது - அதன் நன்மை கடலினும் பெரிது ஆம். (இவை மூன்று பாட்டானும் முறையே காரணம் இன்றிச் செய்ததூஉம், காலத்தினால் செய்ததூஉம், பயன் தூக்காராய்ச் செய்ததூஉம் அளவிலவாதல் கூறப்பட்டது.) தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். 104 தினைத்துணை நன்றி செயினும் - தமக்குத் தினையளவிற்றாய உபகாரத்தை ஒருவன் செய்தானாயினும்; பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார் - அதனை அவ்வளவிற்றாகக் கருதாது, பனையளவிற்றாகக் கருதுவர் அக்கருத்தின் பயன் தெரிவார். ('தினை', 'பனை' என்பன சிறுமை பெருமைகட்குக் காட்டுவன சில அளவை. அக்கருத்தின் பயனாவது அங்ஙனம் கருதுவார்க்கு வரும் பயன்.) உதவி வரைத்தன் றுதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. 105 உதவி உதவி வரைத்து அன்று - கைம்மாறான உதவி, காரணத்தானும் பொருளானும் காலத்தானும் ஆகிய மூவகையானும் முன் செய்த உதவியளவிற்று அன்று; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து - அதனைச் செய்வித்துக் கொண்டவர்தம் அமைதி அளவிற்று. '(சால்பு எவ்வளவு பெரிதாயிற்று, உதவியும் அவ்வளவு பெரிதாம்' என்பார், "சால்பின்" வரைத்து என்றார். இவை இரண்டு பாட்டானும் மூன்றும் அல்லாத உதவி மாத்திரமும் அறிவார்க்குச் செய்த வழிப் பெரிதாம் என்பது கூறப்பட்டது.) மறவற்க மாசற்றார் கேண்மை: துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு. 106 துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு துறவற்க - துன்பக் காலத்துத் தனக்குப் பற்றுக்கோடாயினாரது நட்பை விடாதொழிக;
|