பக்கம் எண் :

500

('காண்க' என்பது ஈண்டு வேண்டிக் கோடற்பொருட்டு. அதுவேண்டும் என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண்வந்தது. 'கேட்ட துணையான் நீங்காது' என்பதாம்.)

வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.
1266
(இதுவும் அது.) கொண்கன் ஒருநாள் வருக - இத்துணைநாளும் வாராக் கொண்கன் ஒருநாள் என்கண் வருவானாக; பைதல் நோயெல்லாம் கெடப் பருகுவன் - வந்தால் பையுளைச் செய்கின்ற இந்நோயெல்லாம் கெட அவ்வமிழ்தத்தை வாயில்கள் ஐந்தானும் பருகக் கடவேன். ('வருக' என்பதற்கும் 'மன்' என்பதற்கும் மேல் உரைத்தவாறே கொள்க. அக்குறிப்பு 'அவ்வொரு நாளைக்குள்ளே இனி வரக்கடவ நோய்களும் கெடுப்பல்' என்பதாம்.)

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் வரின்.

1267
(இதுவும் அது.) கண் அன்ன கேளிர் வரின் - கண்போற்சிறந்த கேளிர் வருவராயின், புலப்பேன் கொல் - அவர் வரவு நீட்டித்தமை நோக்கி யான் புலக்கக்கடவேனோ; புல்லுவேன் கொல் - அன்றி என் ஆற்றாமை நோக்கிப் புல்லக்கடவேனோ; கலப்பேன்கொல் - அவ்விரண்டும் வேண்டுதலான் அவ்விரு செயல்களையும் விரவக்கடவேனோ? யாது செய்யக் கடவேன்? (புலவியும் புல்லலும் ஒரு பொழுதின்கண் விரவாமையின், 'கலப்பேன் கொல்' என்றாள். மூன்றனையுஞ் செய்தல் கருத்தாகலின், விதுப்பாயிற்று. இனிக் 'கலப்பேன்கொல்' என்பதற்கு 'ஒரு புதுமை செய்யாது பிரியாத நாட்போலக் கலந்தொழுகுவேனோ'? என்று உரைப்பாரும் உளர்.)

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.

1268
(வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் வினை முடிவு நீட்டித்துழித் தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லியது.) வேந்தன் வினை கலந்து வென்று ஈக - வேந்தன் வினைசெய்தலைப் புரிந்து வெல்வானாக; மனை கலந்து மாலை விருந்து அயர்கம் - யாமும் மனைவியைச் சென்று கூடி ஆண்டை மாலைப்பொழுதிற்கு விருந்து அயர்வேமாக.