அதிகாரம் 128. குறிப்பு அறிவுறுத்தல் [ அஃதாவது , தலைமகன் , தலைமகள் , தோழி என்ற இவர் ஒருவர் குறிப்பினை ஒருவர்க்கு அறிவுறுத்தல் . இது பிரிந்து போய தலைமகன் வந்து கூடியவழி நிகழ்வதாகலின் ,அவர் வயின் விதும்பலின்பின் வைக்கப்பட்டது.]
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் உரைக்கல் உறுவதொன் றுண்டு. 1271 (பிரிந்து கூடிய தலைமகன் வேட்கை மிகவினாற் புதுவது பன்னாளும் பாராட்டத் தலைமகள் இது ஒன்று உடைத்து என அஞ்சியவழி, அதனை அவள் குறிப்பான் அறிந்து, அவன் அவட்குச் சொல்லியது.) கரப்பினும் - நீ சொல்லாது மறைத்தாயாயினும்; ஒல்லா கை இகந்து - அதற்கு உடம்படாதே நின்னைக் கை கடந்து; நின் உண்கண் உரைக்கலுறுவது ஒன்று உண்டு - நின்கண்களே எனக்குச் சொல்லல் உறுவதொரு காரியமுண்டாய் இராநின்றது, இனி அதனை நீயே தெளியச் சொல்வாயாக. (காத்தல் - நாணால் அடக்குதல், தன்கண் பிரிதற் குறிப்புள்ளதாகக் கருதி வேறுபட்டாளது வேறுபாடு குறிப்பான் அறிந்து அவட்குத் தன் பிரியாமைக் குறிப்பு அறிவுறுத்தவாறு.)கண்நிறைந்த காரிகைக் காம்பேர்தோள் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது. 1272 (நாணால் அவள் அது சொல்லாளாயவழி அவன் தோழிக்குச் சொல்லியது.) கண் நிறைந்த காரிகைக் காம்பு ஏர் தோள் பேதைக்கு - என் கண்ணிறைந்த அழகினையும் வேயையொத்த தோளினையும் உடைய நின் பேதைக்கு; பெண் நிறைந்த நீர்மை பெரிது - பெண்பாலரிடத்து நிறைந்த மடமை அவ்வளவன்றி மிகுந்தது. (இலதாய பிரிவினைத் தன்கண் ஏற்றி அதற்கு அஞ்சுதலான், இவ்வாறு கூறினான்.)மணியில் திகழ்தரு நூல்போல் மடந்நை அணியில் திகழ்வதொன் றுண்டு. 1273 (இதுவும் அது.) மணியில் திகழ்தரும் நூல்போல் - கோக்கப்பட்ட பளிக்கு மணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாம் நூல் போல; மடந்தை அணியில் திகழ்வது ஒன்று உண்டு - இம்மடந்தையது அணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாகின்றதொரு குறிப்பு உண்டு.
|