பக்கம் எண் :

506

(களித்தல் - உணர்வழியாதது. மகிழ்தல் - அஃதழிந்தது, இவ்விரண்டும் உண்டுழியல்லது இன்மையின் 'கள்ளுக்கு இல்' என்றாள். 'உண்டு' என்பது இறுதி விளக்கு. 'அப்பெற்றித்தாய காமம் உடையான் புலத்தல் யாண்டையது' என்பதாம்.)

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.
1282
(இதுவும் அது.) காமம் பனைத்துணையும் நிறைய வரின் - மகளிர்க்குக் காமம் பனையளவினும் மிக உண்டாமாயின்; தினைத்துணையும் ஊடாமை வேண்டும் - அவரால், தம் காதலரோடு தினையளவும் ஊடுதல் செய்யாமை வேண்டப்படும். ('பனைத்துணையும்' என்புழி, ஐந்தனுருபு விகாரத்தால் தொக்கது. ஊடின் வருத்தமிகும் எனப் பிறர்க்கும் உறுதி கூறுவான் போன்று, தன் விதுப்புக் கூறியவாறு.)

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.

1283
(இதுவும் அது.) பேணாது பெட்பவே செய்யினும் - நம்மை அவமதித்துத் தான் செய்ய வேண்டியனவே செய்யுமாயினும்; கொண்களைக் கண் காணாது அமையல - கொண்கனை என் கண்கள் காணாது அமைகின்றன இல்லை. (தன் விதுப்புக் கண்கள்மேல் ஏற்றப்பட்டது. 'அத்தன்மையேன் அவனோடு புலக்குமாறு என்னை' ? என்பதாம்.)

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதென் நெஞ்சு.

1284
(இதுவும் அது.) தோழி - தோழி; ஊடற்கண் சென்றேன் - காதலரைக் காணாமுன் அவர் செய்த தவற்றைத் தன்னோடு நினைந்து யான் அவரோடு ஊடுதற்கண்ணே சென்றேன்; என் நெஞ்சு அது மறந்து கூடற்கண் சென்றது - கண்டபின் என் நெஞ்சு அதனை மறந்து கூடுதற்கண்ணே சென்றது. (சேறல் நிகழ்தல் நினைத்த நெஞ்சிற்கும் ஒத்தலின், 'அது மறந்து' என்றாள். அச்செலவாற் பயன்என் என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. 'அவ்வெல்லையிலே நெஞ்சு அறைபோகலான், அது முடிந்ததில்லை' என்பதாம்.)