எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட விடத்து.1285 (இதுவும் அது.) எழுதுங்கால் கோல் காணாக் கண்ணேபோல் - முன்னெல்லாங் கண்டிருந்தும் எழுதுங்காலத்து அஞ்சனக் கோலின் இயல்பு காணமாட்டாத கண்ணேபோல; கொண்கன் பழி கண்டவிடத்துக் காணேன் - கொண்கனது தவறு காணாதவிடத் தெல்லாம் கண்டிருந்து. அவனைக் கண்டவிடத்துக் காணமாட்டேன். (கோல்: ஆகுபெயர். இயல்பு: கருமை. 'என் இயல்பு இதுவாகலின் மேலும் அது தப்ப முடியாது' என்பதாம்.)காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை. 1286 (இதுவும் அது.) காணுங்கால் தவறாய காணேன் - கொண்கனை யான் காணும் பொழுது அவன் தவறாயவற்றைக் காண்கின்றிலேன்; காணாக்கால் தவறல்லவை காணேன் - காணாத பொழுது அவையேயல்லாது பிறவற்றைக் காண்கின்றிலேன். (செயப்படுபொருள் அதிகாரத்தான் வந்தது. 'முன்பு நான் நின்னொடு சொல்லிய தவறுகள் இதுபொழுது காணாமையின் புலந்திலேன்', என்பதாம்.)உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் பொய்த்தல் அறிந்தென் புலந்து. 1287 (இதுவும் அது.) உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல - தம்மை ஈர்த்துக் கொண்டு போதல் அறிந்துவைத்து ஒழுகுகின்ற புனலுட் பாய்வார் செயல் போல; பொய்த்தல் அறிந்து புலந்து என்? - புலவி முடிவு போகாமை அறிந்து வைத்துக் கொண்கனோடு புலந்து பெறுவது என்? ('பாய்பவர்' என்பது ஆகுபெயர். பொய்த்தல் - புரைபடுதல், புலந்தாலும் பயனில்லை என்பதாம். 'பொய்த்தல் அறிந்தேன்' என்பது பாடமாயின், 'உய்த்தலறிய ஓடும் நீருட் பாய்வார் முடிவறியப் பண்டொருகாற் புலந்து முடியாமை அறிந்தேன், இனி அது செயற்பாற்றன்று என' உரைக்க.)
|