(இதுவும் அது.) கண்ணின் துனித்தே - காதலி முன்னொரு ஞான்று புல்லல் விதுப்பினாற் சென்ற என்னொடு தன் கண் மாத்திரத்தான் ஊடி; புல்லுதல் என்னினும் தான் விதுப்பு உற்றுக் கலங்கினாள் - புல்லுதலை என்னினும் தான் விதும்பலால் அது தன்னையும் அப்பொழுதே மறந்து கூடிவிட்டாள்; அதனால் யான் இத்தன்மையேனாகவும் விதுப்பின்றி ஊடி நிற்கின்ற இவள் அவளல்லள். (கண் மாத்திரத்தான் ஊடல் - சொல் நிகழ்ச்சியின்றி அது சிவந்த துணையே யாதல். 'அவளாயின் இங்ஙனம் ஊடற்கண் நீடாள்' என்பது பயன்.) அதிகாரம் 130. நெஞ்சொடு புலத்தல்[ அஃதாவது , காரணம் உண்டாய வழியும் புலக்கக் கருதாது , புணர்ச்சி விதும்புகின்ற நெஞ்சுடனே தலைமகள் புலத்தலும் ,தலைமகன் புலத்தலும் ஆம் . அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.]
அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீஎமக் காகா தது. 1291 (தலைமகன்கண் தவறுண்டாய வழியும் புலவி கருதாத நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது.) நெஞ்சு - நெஞ்சே; அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் - அவருடைய நெஞ்சு நம்மை நினையாது அவர்க்காய் நிற்றல் கண்டு வைத்தும்; நீ எமக்கு ஆகாதது எவன் - நீ எமக்காய் நில்லாது, அவரை நினைத்தற் காரணம் யாது? (அவர்க்கு ஆதல் - அவர் கருதியதற்கு உடம்படுதல். எமக்காகாதது என்றது, புலவிக்கு உடம்பாடாமையை. 'ஒரு கருமத்தைத் தாமாக அறிந்து செய்யமாட்டாதார் செய்வாரைக் கண்டாயினும் செய்வர். நீ அதுவும் செய்கின்றிலை' என்பதாம்.)உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅரெனச் சேறிஎன் நெஞ்சு. 1292 (இதுவும் அது.) என் நெஞ்சு - என் நெஞ்சே; உறாதவர்க்கண்ட கண்ணும் - மேலும் நம்மாட்டு அன்புடையராகாதவரை உள்ளவாறு அறிந்த இடத்தும்; செறார் என அவரைச் சேறி - நாம் சென்றால் வெகுளார் என்பது பற்றி நீ அவர் மாட்டுச் செல்லாநின்றாய், இப்பெற்றியது மேலும் ஓர் அறியாமையுண்டோ?
|