பக்கம் எண் :

512
எள்ளின் இளிவாம்என் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.
1298
(இதுவும் அது.) உயிர்க் காதல் நெஞ்சு - உயிர்மேல் காதலையுடைய என் நெஞ்சு; எள்ளின் இளிவு ஆம் என்று எண்ணி -நம்மை எள்ளிச் சென்றார் என்று நாமும் எள்ளுவேமாயின் பின் நமக்கு இளிவாம் என்று கருதி; அவர் திறம் உள்ளும் - அவர் திறத்தினையே நினையாநின்றது. (எள்ளுதல் - வாயில் மறுத்தல். இளிவு - வழிபடாமையானும், பிரிவாற்றாமையானும் , நாணும் நிறையும் முதலிய இழத்தலானும் உளதாவது. திறம் - வாயில் நேர்தலும் வருதலும் கூடலும் முதலாயின. இளிவிற்கு அஞ்சுதலானும் இறந்துபட மாட்டாமையானும் கூடக் கருதாநின்றது என்பதாம்.)

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சம் துணையல் வழி.

1299
(உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது.) துன்பத்திற்கு - ஒருவர்க்குத் துன்பம் வந்துழி, அது நீக்குதற்கு; தாம் உடைய நெஞ்சம் துணை அல் வழி - தாம் உரித்தாகப் பெற்ற தம்முடைய நெஞ்சம் துணையாகாவழி; துணையாவார் யாரே - வேறு துணையாவார் ஒருவரும் இல்லை (ஈண்டுத் துன்பமாவது - ஊடலுணர்ப்புவயின் வாராமை. அதற்கு நெஞ்சம் துணையாகாமையாவது, அவளை அன்பிலள் என்றொழியாது கூடற்கண்ணே விதும்பல். 'ஒரு துணையும் இன்மையின், இஃது உற்று விடுதலே உள்ளது', என்பதாம்.)

தஞ்சம் தமர்அல்லர் ஏதிலார் தாம்உடைய
நெஞ்சம் தமர்அல் வழி.

1300
(இதுவும் அது.) தாம் உடைய நெஞ்சம் தமர் அல்வழி - தாம் உரித்தாக உடைய நெஞ்சம் ஒருவர்க்குத் தமர் அல்லாவழி; ஏதிலார் தமர் அல்லர் தஞ்சம் - அயலார் தமர் அல்லராதல் சொல்ல வேண்டுமோ? ('பிறளொருத்தியைக் காதலி என்று கருதி என் நெஞ்சே என்னை வருத்தாநின்ற பின் அப்பிறள் புலக்கின்றது எளிது', என்பதாம்.)