பக்கம் எண் :

513
அதிகாரம் 131 .புலவி

[ அஃதாவது , இருவர் நெஞ்சும் புணர்ச்சி விதும்பாது புலக்கக் கருதியவழி ஒருவரோடு ஒருவர் புலத்தல் . அதிகார முறையையும் இதனானே விளங்கும் .]

புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.

1301
(வாயிலாகச் சென்ற தோழி தலைமகள் வாயில் நேர்தற்பொருட்டு அவளொடு நகையாடிச் சொல்லியது.) அவர் உறும் அல்லல் நோய் சிறிது காண்கம் - அங்ஙனம் புலந்தால் காதலரெய்தும் அல்லல் நோயினை யாம் சிறிது காணக்கடவோம்; புல்லாது இராப் புலத்தை - நீ அவரை விரைந்து சென்று புல்லாதே; இத்தொழிலை மேலிட்டுக் கொண்டிருந்து புலப்பாயாக. (அல்லல் நோய் - துன்பத்தைச் செய்யும் காமநோய். 'சிறிது' என்றாள், புலவியை நீள விடலாகாது என்பது பற்றி. 'புலத்தை' என்புழி ஐகாரம் 'கடம்பூண்டொருகால் நீ வந்தை' (கலித்.குறிஞ்சி.27) என்புழிப்போல, முன்னிலை வினை விகுதி. 'புலத்தி' என்பதூஉம் பாடம். புலவிக்குறிப்புக்கண்டு அவள் வழியளாய் நின்று, 'நாம் உற்ற வருத்தம் அவரும் சிறிதுற்று அறிதல் வேண்டும்' என நகையாடி நேர்வித்தவாறு.)

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.

1302
(புலவியொழிந்து வாயில் நேரும் வகை அவள் சொல்லியது.) புலவி உப்பு அமைந்தற்று - புலவி கலவி இன்பம் செயற்கு வேண்டுமளவிற்றாதல் உப்புத் துய்ப்பனவற்றை இன்சுவையாக்கற்கு வேண்டுமளவிற்றாதல் போலும்; சிறிது நீளவிடல் அது மிக்கற்று - இனி அதனை அவ்வளவில் சிறிது மிகவிடுதல் அவ்வுப்பு அளவின் மிக்காற்போலும். (நீள விடல் - அளவறிந்துணராது கலவிமேல் எழுந்த குறிப்பழுங்குமளவும் செய்தல். 'சிறிது நீள விடலாகாது' என்றாள், நேர்விக்கின்றாளாகலின். 'உப்பு மிக்க வழித் துய்ப்பது சுவையின்றானாற் போலப் புலவி மிக்கவழிக் கலவி இன்ப மின்றாம்' என்றமையின், இது பண்பு உவமை.)