பக்கம் எண் :

516
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.
1309
(இதுவும் அது.) நீரும் நிழலதே இனிது - உயிர்க்கு இன்றியமையாத நீரும் நிழலின் கண்ணதே இனிதாவது, ஏனை வெயிலின் கண்ணது ஆகாது; புலவியும் வீழுநர்கண்ணே இனிது - அது போலக் கலவிக்கு இன்றியமையாத புலவியும் அன்புடையார்கண்ணே இனிதாவது, ஏனை அன்பிலார்கண் ஆகாது. (நிழற்கண் இருந்த நீர் குளிர்ச்சிமிக்குத் தாகம் தணித்தலின், இனிதாயிற்று. வீழுநர் - ஆற்றாமைக்கு நோதலும் கூடுதற்கண் வேட்கையும் உடையராவார். 'இவள் நம்மாட்டு அவ்விரண்டும் இன்மையின் இப்புலவி தானும் இன்னாதாகா நின்றது', என்பதாம்.)

ஊடல் உணங்க விடுவாரோ டென்நெஞ்சம்
கூடுவேம் என்ப தவா.

1310
(இதுவும் அது.) ஊடல் உணங்க - தான் ஊடற்கண்ணே மெலியாநிற்கவும்; விடுவாரொடு கூடுவேம் என்பது என் நெஞ்சம் அவா - விட்டிருக்க வல்லாரோடு கூடக்கடவேம் என்று என் நெஞ்சம் முயறற்கு ஏது தன் அவாவே; பிறிது இல்லை. (அன்பும் அருளும் இல்லாதவரை உடையர் என்றும் அவரோடு யாம் கூடுவம் என்றும் கருதி அதற்கு முயறல் அவாவுற்றார் செயலாகலின், 'கூடுவேம் என்பது அவா' என்றான். காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. 'இக்கூட்டம் முடியாது' என்பதாம்.)

அதிகாரம் 132. புலவி நுணுக்கம்

[அது , ' புலவியது ' நுணுக்கம் என விரியும் .அஃதாவது , தலைமகனும் தலைமகளும் ஒர் அமளிக்கண் கூடியிருந்துழி அவன் மாட்டுப் புலத்தற் காரண மில்லையாகவும் , காதல் கைம்மிகுதலான் நூண்ணியதோர் காரணமுளதாக உட்கொண்டு , அதனை அவன்மேலேற்றி அவள் புலத்தல். காரணத்தின் நுணுக்கம் காரியத்தின்மேல் நின்றது . அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.]

பெண்இயலார் எல்லோரும் கண்ணின் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.

1311