பக்கம் எண் :

517
(உலாப்போய் வந்த தலைமகன் பள்ளியிடத்தானாகத் தலைமகள் சொல்லியது.) பரத்த - பரத்தைமையுடையாய்; பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொதுவுண்பர் - நின்னைப் பெண் இயல்பினையுடையார் யாவரும் தம் கண்ணான் பொதுவாக உண்பர்; நின் மார்பு நண்ணேன் - அதனால் அவர் மிச்சிலாய நின் மார்பினைப் பொருந்தேன். (கற்பு நாண் முதலிய நற்குணங்களின்மையின் பரத்தையர்க்குள்ளது பெண் இயற்கை மாத்திரமே என்னுங் கருத்தால், 'பெண் இயலார்' என்றாள். பொதுவாக உண்டல் - தஞ்சேரிச் செலவின் முறையானன்றி ஒரு காலத்து ஒருங்கு நோக்குதல்; அதுவும் ஓர் குற்றம். தாம் நோக்கி இன்புற்றவாறே அவரும் நோக்கி இன்புறுவர் என ஆசங்கித்து அவர்பாற் பொறாமை எய்துதலின், நுணுக்கமாயிற்று.)

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.

1312
(தலைமகன் நீக்கத்துச் சென்ற தோழிக்குத் தலைமகள் பள்ளியிடத்து நிகழ்ந்தது கூறியது.) ஊடி இருந்தேமாத் தும்மினார் - யாம் தம்மோடு ஊடி உரையாடாதிருந்தேமாகக் காதலர் தும்மினார்; யாம் தம்மை நீடுவாழ்கென்பாக்கு அறிந்து - அது நீங்கித் தம்மை நீடுவாழ்கென்று உரையாடுவேமாகக் கருதி. (தும்மியக் கால் வாழ்த்துதல் மரபாகலான், உரையாடல் வேண்டிற்று என்பதாம். இயல்பான் நிகழ்ந்த தும்மலைக் குறிப்பான் நிகழ்ந்ததாகக் கோடலின், நுணுக்கமாயிற்று.)

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.

1313
(தலைமகள் புலவிக் குறிப்பினைக் கண்டு, நீவிர் கூடியொழுகா நிற்கவும் இது நிகழ்தற்குக் காரணம் யாது? என்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது.) கோட்டுப்பூச் சூடினும் - யான் கோடுதலைச்செய்யும் மாலையைச் சூடினேனாயினும்; ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று காயும் - நும்மாற்காதலிக்கப்பட்டாள் ஒருத்திக்கு இப்பூவணி காட்டல் வேண்டிச் சூடினீர் என்று வெகுளாநிற்கும்; இத்தன்மையாட்கு ஒரு காரணம் வேண்டுமோ? ('கோடு' என்பது முதனிலைத் தொழிற்பெயர். பூ - ஆகுபெயர், வளையமாகச் சூடினும் என்பதாம்;