பக்கம் எண் :

518

'கோட்டம் கண்ணியும் கொடுந்திரையாடையும்' (புறநா.275)என்றார் பிறரும். இனி, 'அம்மருதநிலத்துப் பூவன்றி வேற்றுநிலத்துக் கோட்டுப்பூவைச் சூடினேனாயினும், ஈண்டையாள், பிறளொருத்திக்கு அவ்வேற்றுப் பூவணிகாட்டல் வேண்டிச் சூடினீர் என்று வெகுளும்', எனினும்அமையும்.)

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.
1314
(இதுவும் அது.) யாரினும் காதலம் என்றேனா - காமம் நுகர்தற்குரிய இருவராயினார் யாவரினும் யாம் மிக்க காதலையுடையேம் என்பது கருதி யாரினும் காதலம் என்றேனாக; யாரினும் யாரினும் என்று ஊடினாள் - நின் தோழி அது கருதாது, என்னாற் காதலிக்கப்பட்ட மகளிர் பலருள்ளும் நின்கண் காதலுடையேன் என்றேனாகக் கருதி, அம் மகளிர் யாரினும் என்கண் காதலுடையராயினீர் என்று சொல்லிப் புலந்தாள். (தலைமகள் கருத்திற்குத் தன்மைப் பன்மை உயர்ச்சிக்கண் வந்தது. 'யான் அன்பு மிகுதியாற் சொல்லியதனைக் கருத்து வேறுபடக் கொண்டதல்லது பிறிது காரணமில்லை', என்பதாம்.)

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.

1315
(இதுவும் அது.) இம்மைப் பிறப்பிற் பிரியலம் என்றேனா - காதல் மிகுதியான் இம்மையாகிய பிறப்பின்கண் யாம் பிரியேம் என்று சொன்னேனாக; கண் நிறை நீர் கொண்டனள் - அதனான் ஏனை மறுமையாகிய பிறப்பின்கண் பிரிவல் என்னும் குறிப்பினேனாகக் கருதி, அவள் தன் கண்நிறைந்த நீரினைக் கொண்டாள் ( 'வெளிப்படுசொல்லைக் குறிப்புச் சொல்லாகக் கொள்கின்றதல்லது என்பால் தவறில்லை', என்பதாம்.)

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.

1316
(இதுவும் அது.) உள்ளினேன் என்றேன் - பிரிந்த காலத்து நின்னையிடையின்றி நினைந்தேன் என்னும் கருத்தால், யான் உள்ளினேன் என்றேன்; மற்று என் மறந்தீர் என்று என்னைப் புல்லாள் புலத்தக்கனள் - என, அதனை ஒருகால் மறந்து பின் நினைந்தேன் என்றதாகக் கருதி, என்னை யிடையே மறந்தீர் என்று சொல்லி, முன் புல்லுதற்கு அமைந்தவள் அஃதொழிந்து புலத்தற்கு அமைந்தாள்.