(மற்று - வினை மாற்றின்கண் வந்தது. அருத்தாபத்திவகையான் மறத்தலையுட்கொண்டு புலந்தாள் என்பதாம்.) வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள் யார்உள்ளித் தும்மினீர் என்று.1317 (இதுவும் அது.) தும்மினேனாக வழுத்தினாள் - கூடியிருக்கின்றவள் யான் தும்மினேனாகத் தன் இயற்கை பற்றி வாழ்த்தினாள்; அழித்து யார் உள்ளித் தும்மினீர் என்று அழுதாள் - அங்ஙனம் வாழ்த்திய தானே மறித்து, நும்மை நினைத்து வருந்துகின்ற மகளிருள் யாவர் நினைத்தலால் தும்மினீர்? என்று சொல்லிப் புலந்தழுதாள். (வாழ்த்தலொடு புலத்தல் இயையாமையின், 'அழித்து' என்றான். அன்புடையார் நினைத்தவழி அந்நினைக்கப்பட்டார்க்குத் தும்மல் தோன்றும் என்பது மகளிர் வழக்கு. 'இல்வழக்கை உள்வழக்காகக் கருதிப் புலந்தாள்' என்பதாம்.)தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று. 1318 (இதுவும் அது.) தும்முச் செறுப்ப - எனக்குத் தும்மல் தோன்றியவழி, யார் உள்ளித் தும்மினீர்? என்று புலத்தலை அஞ்சி, அதனையான் அடக்கினேன், அங்ஙனம் அடக்கவும்; நுமர் உள்ளல் எம்மை மறைத்திரோ என்று அழுதாள் - நுமர் நும்மை நினைத்தலை எம்மை மறைக்கல் உற்றீரோ என்று சொல்லிப் புலந்தழுதாள். ('தும்மு' என்பது முதனிலைத் தொழிற்பெயர். செறுப்ப என்புழி இறந்தது தழீஇய எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. எம்மை என்பது 'நும்மோடு யாதுமியைபில்லாத எம்மை' என்பதுபட நின்ற இசையெச்சம். இதனை வடநூலார் 'காகு' என்ப. 'தும்மினும் குற்றம், ஒழியினும் குற்றமாயக்கால் செயற்பாலது யாது'? என்பதாம்.)தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர் இந்நீரர் ஆகுதிர் என்று. 1319 |