அவர்க்குத் தவறு இல்லையாயினும் - அவர்மாட்டுத் தவறில்லை ஆயினும், அவர் அளிக்குமாறு ஊடுதல் வல்லது - நமக்கு அவர் தலையளி செய்கின்றவாறு அவரோடு ஊடுதலை விளைக்கவற்றாகின்றது. ('அவர்க்கு' என்பது, வேற்றுமை மயக்கம். 'அளவிறந்த இன்பத்தராகலின், யான் எய்தற்பாலதாய இத்தலையளி ஒழிந்தாரும் எய்துவர் எனக் கருதி அது பொறாமையான் ஊடல்நிகழா நின்றது' என்பதாம்.) ஊடலில் தோன்றும் சிறுதுனி நல்அளி வாடினும் பாடு பெறும்.1322 (புலவாக்காலும் அத்தலையளி பெறலாயிருக்க, அஃது இழந்து புலவியான் வருந்துவது என்னை? என்றாட்கு, அவள் சொல்லியது.) ஊடலின் தோன்றும் சிறுதுனி - ஊடல் ஏதுவாக நங்கண் தோன்றுகின்ற சிறிய துனிதன்னால்; நல்லளி வாடினும் பாடு பெறும் - காதலர் செய்யும் நல்ல தலையளி வாடுமாயினும் பெருமை எய்தும். ('தவறின்றி நிகழ்கின்ற ஊடல் கடிதின் நீங்கலின் அத்துன்பமும் நில்லாது' என்பாள், 'சிறு துனி' என்றும், 'ஆராமைபற்றி நிகழ்தலின் அதனான் நல்லளி வாடாது' என்பாள், 'வாடினும்' என்றும், 'பின்னே பேரின்பம் பயக்கும்' என்பாள் 'பாடு பெறும்' என்றும் கூறினாள்.)புலத்தலின் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு நீர்இயைந் தன்னார் அகத்து. 1323 (இதுவும் அது.) நிலத்தொடு நீர் இயைந்து அன்னார் அகத்துப் புலத்தலின் - நிலத்தொடு நீர் கலந்தாற்போல ஒற்றுமை உடைய காதலர் மாட்டுப் புலத்தல் போல; புத்தேள் நாடு உண்டோ - நமக்கின்பம் தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ? இல்லை. (நீர் தான் நின்ற நிலத்தியல்பிற்றாமாறு போலக் காதலரும் தாம் கூடிய மகளிரியல்பினராகலான், அதுபற்றி அவரோடு புலவி நிகழும் என்பாள், 'நிலத்தொடு நீர் இயைந்தன்னாரகத்து' என்றும், 'அவர் நமக்கும் அன்னராகலின்', அப்புலவி பின்னே பேரின்பம் பயவாநின்றது' என்பாள், 'புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ' என்றும் கூறினாள், உவமம் பயன்பற்றி வந்தது.)
|