பக்கம் எண் :

522
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும்என்
உள்ளம் உடைக்கும் படை.
1324
(அப்புலவி இனி யாதான் நீங்கும்? என்றாட்குச் சொல்லியது.) புல்லி விடாப் புலவியுள் தோன்றும் - காதலரைப் புல்லிக் கொண்டு பின் விடாமைக்கு ஏதுவாகிய அப்புலவிக்கண்ணே உளதாம்; என் உள்ளம் உடைக்கும் படை - அதன் மேற்சென்ற என்னுள்ளத்தைக் கெடுக்கும் படைக்கலம். ('புலவியுள்' என்னும் ஏழாவது வினைநிகழ்ச்சிக்கண் வந்தது. என்னுள்ளம் உடைக்கும் படைக்கலம் என்றது, வணக்கத்தையும் பணிமொழியையும் . படைக்கலம் என்றாள், அவற்றான் அப் புலவிஉள்ளம் அழிதலின். புலவி நீங்கும் திறம் கூறியவாறு.)

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்தோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.

1325
(தலைமகளை ஊடல் நீக்கிக் கூடிய தலைமகன் கழியுவகையனாய்த் தன்னுள்ளே சொல்லியது.) தவறு இலராயினும் தாம் வீழ்வார் மென்தோள் அகறலின் - ஆடவர் தங்கண் தவறிலராயினும், உடையார்போல ஊடப்பட்டுத் தாம் விரும்பும் மகளிருடைய மெல்லிய தோள்களைக் கூடப்பெறாத எல்லைக்கண்; ஆங்கு ஒன்று உடைத்து - அவர்க்கு அப்பெற்றியதோர் இன்பம் பயத்தல் உடைத்து. (உடையராயக்கால் இறந்த இன்பத்தோடு வரும் இன்பமுமெய்துவர் ஆகலின், அது மிக நன்று. மற்றை இலராயக்காலும் வரும் இன்பத்தை இகழ்ந்ததில்லை என்னும் கருத்தால், 'தவறிலராயினும் ஆங்கு ஒன்று உடைத்து' என்றான். ஊடலினாய இன்பம் அளவிறத்தலின், 'கூறற்கரிது' என்பான், 'அப்பெற்றியதொன்று' என்றான். 'தவறின்றி' ஊடியதூஉம் எனக்கு இன்பமாயிற்று' என்பதாம்.)

உணலினும் உண்ட தறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

1326
(இதுவும் அது.) உணலினும் உண்டது அறல் இனிது - உயிர்க்கு, மேலுண்பதனினும் முன் உண்டது அறுதல் இன்பந்தரும்; காமம் புணர்தலின் ஊடல் இனிது - அதுபோலக் காமத்திற்கு மேற்புணர்தலினும் முன்னைத் தவறு பற்றி ஊடுதல் இன்பம் தரும்.