பக்கம் எண் :

523

('காமத்திற்கு' என்புழிச் சாரியையும் நான்கனுருபும் விகாரத்தால் தொக்கன. பசித்துண்ணும்வழி மிக உண்ணலுமாய் இன்சுவைத்துமாம்; அது போல,அகன்று கூடும்வழி ஆராததுமாய்ப் பேரின்பத்ததுமாம் எனத் தன் அனுபவம் பற்றிக் கூறியவாறு.)

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும்.
1327
(இதுவும் அது.) ஊடலில் தோற்றவர் வென்றார் - காமம் நுகர்தற்குரிய இருவருள் ஊடலின்கண் தோற்றவர் வென்றாராவர்; அது கூடலில் காணப்படும் - அது அப்பொழுது அறியப்படாதாயினும், பின்னைப் புணர்ச்சியின்கண் அவரால் அறியப்படும். (தோற்றவர் - எதிர்தலாற்றாது சாய்ந்தவர். அவர் புணர்ச்சிக்கண் பேரின்பம் எய்தலின் வென்றாராயினார். மன்னும் உம்மும் அசைநிலை. 'யான் அது பொழுது சாய்தலின், இது பொழுது பேரின்பம் பெற்றேன்' என்பதாம்.)

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.

1328
(இதுவும் அது.) நுதல் வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு - இதுபொழுது இவள் நுதல் வெயர்க்கும்வகை கலவியின்கண் உளதாய இனிமையை; ஊடிப் பெறுகுவம் கொல்லோ - இன்னும் ஒரு கால் இவள் ஊடி யாம் பெறவல்லேமோ? (கலவியது விசேடம்பற்றி 'நுதல் வெயர்ப்ப' என்றான். இனிமை: கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிதலானாய இன்பம், 'இனி அப் பேறு கூடாது' எனப் பெற்றதன் சிறப்புக் கூறியவாறு.)

ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப
நீடுக மன்னோ இரா.

1329
(இதுவும் அது.) ஒளி இழை ஊடுக மன் - ஒளியிழையினை உடையாள் இன்னும் எம்மோடு ஊடுவாளாக; யாம் இரப்ப இரா நீடுக மன் - அங்ஙனம் அவள் ஊடிநிற்கும் அதனை உணர்த்துதற் பொருட்டு யாம் இரந்து நிற்றற்கும் காலம் பெறும் வகை, இவ்விரவு விடியாது நீட்டித்தல் வேண்டுக.