பக்கம் எண் :

59

கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

130

கதம் காத்துக் கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி - மனத்தின்கண் வெகுளி தோன்றாமல் காத்துக் கல்வியுடையவனாய் அடங்குதலை வல்லவனது செவ்வியை, அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து - அறக் கடவுள் பாராநிற்கும் அவனை அடையும் நெற்றியின்கண் சென்று. (அடங்குதல் - மனம் புறத்துப் பரவாது அறத்தின் கண்ணே நிற்றல். செவ்வி - தன் குறை கூறுதற்கு ஏற்ற மனம், மொழி முகங்கள் இனியனாம் ஆம் காலம். இப் பெற்றியானை அறம் தானே சென்று அடையும் என்பதாம். இதனான் மனவடக்கம் கூறப்பட்டது.)

அதிகாரம் 14. ஒழுக்கம் உடைமை

(அஃதாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கத்தினையுடையர் ஆதல்.இது, மெய்ம்முதலிய அடங்கினார்க்கு அல்லது முடியாது ஆகலின் , அடக்கம் உடைமையின்பின் வைக்கப்பட்டது.)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
131
ஒழுக்கம் விழுப்பம் தரலான் - ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பினைத் தருதலான், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் - அவ்வொழுக்கம் உயிரினும் பாதுகாக்கப்படும். (உயர்ந்தார்க்கும் இழிந்தார்க்கும் ஒப்ப விழுப்பம் தருதலின், பொதுப்படக் கூறினார். சுட்டு வருவிக்கப்பட்டது. அதனால், அங்ஙனம் விழுப்பந் தருவதாயது ஒழுக்கம் என்பது பெற்றாம். 'உயிர் எல்லாப் பொருளினும் சிறந்தது ஆயினும், ஒழுக்கம் போல விழுப்பம் தாராமையின் உயிரினும் ஓம்பப்படும்' என்றார்.)

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.

132