பக்கம் எண் :

62

பயக்கும். ('நன்றிக்கு வித்தாகும்' என்றதனால் தீயொழுக்கம் பாவத்திற்குக் காரணமாதலும் 'இடும்பை தரும்' என்றதனால் நல் ஒழுக்கம் இன்பம் தருதலும் பெற்றாம், ஒன்று நின்றே ஏனையதை முடிக்கும் ஆகலின். இதனான் பின்விளைவு கூறப்பட்டது.)

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்.

139

வழுக்கியும் தீய வாயால் சொலல் - மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் சொல்லும் தொழில்கள்; ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லா - ஒழுக்கம் உடையவர்க்கு முடியா. (தீய சொற்களாவன: பிறர்க்குத் தீங்கு பயக்கும் பொய் முதலியனவும், வருணத்திற்கு உரிய அல்லனவும் ஆம். அவற்றது பன்மையால், சொல்லுதல் தொழில் பலவாயின. சொல் சாதியொருமை. சொல் எனவே அமைந்திருக்க வாயால் என வேண்டாது கூறினார், 'நல்ல சொற்கள் பயின்றது' எனத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு, இதனை வடநூலார் 'தாற்பரியம்' என்ப.) 

உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
140

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் - உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார், பல கற்றும் அறிவிலாதார் - பல நூல்களையும் கற்றாராயினும் அறிவிலாதார். (உலகத்தோடு பொருந்த ஒழுகுதலாவது, உயர்ந்தோர் பலரும் ஒழுகிய ஆற்றான் ஒழுகுதல். அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதன ஒழிந்து, சொல்லாதனவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான் அவையும் அடங்க 'உலகத்தோடு ஒட்ட' என்றும் அக்கல்விக்குப் பயன் அறிவும், அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகலின், அவ்வொழுகுதலைக் கல்லாதார் 'பல கற்றும் அறிவிலாதார்' என்றும் கூறினார்.ஒழுகுதலைக் கற்றலாவது, அடிப்படுதல். இவை இரண்டு பாட்டானும், சொல்லானும், செயலானும் வரும் ஒழுக்கங்கள் எல்லாம் தொகுத்துக் கூறப்பட்டன.)