பக்கம் எண் :

63
அதிகாரம் 15. பிறன்இல் விழையாமை

(அஃதாவது, காம மயக்கத்தால் பிறனுடைய இல்லாளை விழையாமை.இஃது ஒழுக்கம் உடையார்மாட்டே நிகழ்வதாகலின், ஒழுக்கம் உடைமையின்பின் வைக்கப்பட்டது.)

பிறன்பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்கண் இல்.
141
பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை - பிறனுக்குப் பொருளாம் தன்மையுடையாளைக் காதலித்து ஒழுகுகின்ற அறியாமை, ஞாலத்து அறம் பொருள் கண்டார் கண் இல் - ஞாலத்தின்கண் அறநூலையும் பொருள் நூலையும் ஆராய்ந்து அறிந்தார்மாட்டு இல்லை. (பிறன் பொருள்: பிறன் உடைமை, அறம், பொருள் என்பன ஆகுபெயர். செவ்வெண்ணின் தொகை, விகாரத்தால் தொக்கு நின்றது. இன்பம் ஒன்றையே நோக்கும் இன்ப நூலுடையார் இத்தீயொழுக்கத்தையும் 'பரகீயம்' என்று கூறுவராகலின், 'அறம் பொருள் கண்டார் கண் இல்' என்றார்.எனவே அப்பேதைமை உடையார் மாட்டு அறமும் பொருளும் இல்லை என்பது பெறப்பட்டது.)

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.

142
'அறன்கடை' நின்றாருள் எல்லாம் - காமம் காரணமாகப் பாவத்தின்கண் நின்றார் எல்லாருள்ளும்; பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்- பிறன் இல்லாளைக் காதலித்து, அவன் வாயிற்கண் சென்று நின்றார் போலப் பேதையார் இல்லை. (அறத்தின் நீக்கப்பட்டமையின் அறன்கடை என்றார். அறன்கடை நின்ற பெண்வழிச் செல்வாரும், வரைவின் மகளிரோடும் இழிகுல மகளிரோடும் கூடி இன்பம் நுகர்வாரும் போல அறமும் பொருளும் இழத்தலே அன்றிப், பிறன்கடை நின்றார் அச்சத்தால் தாம் கருதிய இன்பமும் இழக்கின்றார் ஆகலின், 'பேதையார் இல்' என்றார், எனவே இன்பமும் இல்லை என்பது பெறப்பட்டது.)

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்.

143