அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று.150 அறன் வரையான் அல்ல செயினும் - ஒருவன் அறத்தைத் தனக்குரித்தாகச் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும், பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று - அவனுக்குப் பிறன் எல்லைக்கண் நிற்பாளது பெண்மையை விரும்பாமை உண்டாயின், அது நன்று. (இக்குணமே மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறன் இல் விழையாதான்கண், குணம் கூறப்பட்டது.) அதிகாரம் 16. பொறை உடைமை(அஃதாவது, காரணம் பற்றியாதல், மடைமையானாதல் ஒருவன் தமக்கு மிகை செய்தவழித் தாமும் அதனை அவன்கண் செய்யாது பொறுத்தலை உடையராதல். நெறியின் நீங்கிய செய்தாரையும் பொறுக்க வேண்டும் என்றற்கு, இரு பிறன்இல் விழையாமையின் பின் வைக்கப்பட்டது.) அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. 151 அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல-தன்னை அகழ்வாரை வீழாமல் தாங்கும் நிலம் போல; தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை-தம்மை அவமதிப்பாரைப் பொறுத்தல் தலையாய அறம். (இகழ்தல்; மிகையாயின செய்தலும் சொல்லுதலும்) பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று. 152 என்றும் இறப்பினைப் பொறுத்தல்-பொறை நன்றாகலான், தாம் ஒறுத்தற்கு இயன்ற காலத்தும் பிறர் செய்த மிகையைப் பொறுக்க; அதனை மறத்தல் அதனினும் நன்று-அதனை உட்கொள்ளாது அப்பொழுதே மறத்தல் பெறின்அப்பொறையினும் நன்று. ('மிகை' என்றது மேற்சொல்லிய இரண்டினையும் பொறுக்குங்காலும் உட்கொள்ளப்படுதலின், மறத்தலை 'அதனினும் நன்று' என்றார்)
|