அஃகி அகன்ற அறிவு என்னாம் - நுண்ணிதாய் எல்லா நூல்களினும் சென்ற தம் அறிவு என்ன பயத்ததாம்; வெஃகியார் மாட்டும் வெறிய செயின் - பொருளை விரும்பி, யாவர் மாட்டும் அறிவோடு படாத செயல்களை அறிவுடையார் செய்வாராயின். ('யார்மாட்டும் வெறிய செய்த'லாவது தக்கார் மாட்டும் தகாதார் மாட்டும், இழிந்தனவும், கடியனவும் முதலியன செய்தல். அறிவிற்குப் பயன், அவை செய்யாமையாகலின் 'அறிவு என்னாம்' என்றார்.) அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும். 176 அருள் வெஃகி ஆற்றின் கண் நின்றான் - அருளாகிய அறத்தை விரும்பி அதற்கு வழியாகிய இல்லறத்தின்கண் நின்றவன்; பொருள் வெஃகிப் பொல்லாத சூழக் கெடும் - பிறர் பொருளை அவாவி அதனை வருவிக்கும் குற்ற நெறிகளை எண்ணக் கெடும். (இல்லற நெறியில் அறிவு முதிர்ந்துழி அல்லது துறக்கப் படாமையின், அதனைத் துறவறத்திற்கு 'ஆறு' என்றார். கெடுதல்: இரண்டு அறமும் சேர இழத்தல். 'சூழ்ந்த துணையானே கெடும்' எனவே, செய்தால் கெடுதல் சொல்லாமையே பெறப்பட்டது.) வேண்டற்க வெஃகிஆம் ஆக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன். 177 வெஃகி ஆம் ஆக்கம் வேண்டற்க - பிறர் பொருளை அவாவிக்கொண்டு அதனால் ஆகின்ற ஆக்கத்தை விரும்பாது ஒழிக; விளைவயின் பயன் மாண்டதற்கு அரிது ஆம் - பின் அனுபவிக்குங்கால் அவ்வாக்கத்தின் பயன் நன்றாதல் இல்லை ஆகலான். ('விளை' என்பது முதல்நிலைத் தொழிற்பெயர். இவை ஏழு பாட்டானும் வெஃகுதலின் குற்றம் கூறப்பட்டது) அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள். 178 செல்வத்திற்கு அஃகாமை யாதெனின் - சுருங்கல் மாலைத்தாகிய செல்வத்திற்குச் சுருங்காமைக் காரணம் யாது என்று ஒருவன் ஆராயின்; பிறன் வேண்டும் கைப்பொருள்
|